பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252



பின்னர், ஒரு பாடலைப் பாடுவதற்கு அனுமதி தருமாறு பெருமானார் அவர்களை வேண்டினார் கவிஞர் கஃப்.

பெருமானார் அவர்கள் அவரை அனுமதித்தார்கள்.

உடனே, “பானத் ஸுஆது" என்ற சிறப்பு மிக்க ஒரு பாடலைப் பாடினார் கவிஞர் கஃப். ஐம்பத்தியெட்டுப் பாக்களைக் கொண்ட இக்கவிதை அரபு இலக்கியத்தில் புகழ் மிக்கதாகும்.

பெருமானார் அவர்கள் தங்கள் மேனியிலிருந்த மேலாடையை எடுத்து, கவிஞருக்கு அணிவித்து அவரைக் கெளரவித்தார்கள்.


195. தீயவனின் கோரிக்கை

இஸ்லாம், அரேபியா தேசத்தின் பல பகுதிகளிலும் பெரும்பாலும் பரவி விட்டது.

தனிப்பட்ட சில சிறிய கூட்டத்தார்களைத் தவிர, முஸ்லிம்களுக்குப் பெரிய விரோதிகள் அந்த நாட்டில் ஒருவரும் இல்லை.

ஆனால், ஒரு கூட்டத்தார் மட்டும் இஸ்லாத்தில் சேர்ந்திருப்பதாக வேடம் போட்டுக் கொண்டு முஸ்லிம்களுக்கு மத்தியில் இருந்து, மறைமுகமாக விரோதமாகவே இருந்து வந்தார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில், முனாபிக்குள் என்று கூறப்படுபவர்களே அவர்கள். முனாபிக்குள் என்றால் வஞ்சகர்கள் என்று பொருள்.

முனாபிக்குகள் பல சந்தர்ப்பங்களில் விளைவித்த பலவகையான துரோகங்கள், இடையூறுகள், தொல்லைகள், நம்பிக்கை மோசம், கொடுமைகள் பலப்பல. அவற்றை விவரித்தால் ஆத்திரம் மேலோங்கும்.

முனாபிக்குக் கூட்டத்தின் முக்கியத் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபை என்பவன். பெருமானார் அவர்கள் மதினாவுக்கு வந்தது முதல் ஹிஜ்ரீ ஒன்பதாம் வருடம் வரை அவன் இஸ்லாத்துக்குத் தீங்கு செய்வதையே முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்தான். அவன் எவ்வளவோ சூழ்ச்சிகளைச் செய்தான். அவற்றில் எதுவும் வெற்றி பெறவில்லை.