பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254



அவர்கள், பெருமானார் அவர்களின் சட்டையைத் துணிந்து பிடித்து, “அல்லாஹ்வின் விரோதிக்காகத் தாங்கள் பிரார்த்தனை செய்யப் போகிறீர்களா?” என்று கேட்டார்கள்.

விரோதிகளிடமும் கூட முற்றிலும் கருணை உள்ளம் கொண்ட பெருமானார் அவர்கள் “உமறே! சற்று விலகி நில்லும்.” (செல்கிறேன்) என்றார்கள்,

அப்பொழுது, உமறு அவர்கள், “'அவர்களுக்காக (முனாபிக்குகளுக்காக) நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள்; அல்லது கேட்காமல் இருங்கள். அவர்களுக்காக எழுபது தடவை மன்னிப்புக் கேட்டாலும், ஆண்டவன் அவர்களை மன்னிக்க மாட்டான்' எனத் திருக்குர்ஆனில் ஆண்டவன் அருளியிருக்கிறானே!” என்று சொன்னார்கள்.

புன்முறுவல் பூத்தவர்களாகப் பெருமானார் அவர்கள் “அவர்களுக்காக மன்னிப்புக் கேட்கவும் அல்லது கேளாமல் இருக்கவும் ஆண்டவன் எனக்குச் சுதந்திரம் கொடுத்திருக்கிறான். மன்னிப்பதும், மன்னிக்காமல் இருப்பதும் ஆண்டவனுடைய விருப்பத்தைப் பொறுத்தது” என்று கூறிவிட்டு, உபைக்காகத் தொழுகை நடத்தினார்கள்.

பெருமானார் அவர்களின் மேலான கருணை உள்ளத்தைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்து இப்னு உபையின் கூட்டத்தாரில் ஆயிரம் பேர், அன்றைய தினமே உண்மையான முஸ்லிம்களானார்கள்.

அதன்பின், முனாபிக்குகள் முற்றிலும் அடங்கி விட்டார்கள்.


196. மக்காவுக்குச் செல்லுதல்

இஸ்லாம் அரேபியா முழுவதும் பரவியதைக் கண்டதும், பெருமானார் அவர்கள், தாங்கள் இவ்வுலகில் தோன்றிய இலட்சியமானது நிறைவேறி விட்டதாகக் கருதினார்கள்.

ஓயாமல் சண்டை சச்சரவு கொலை இவற்றையே தொழிலாகக் கொண்டிருந்தவர்களின் இதயங்களை அன்பு, சகோதரத்துவம், நீதி என்னும் மேலான - கனிவான - கயிற்றால் பெருமானார் அவர்கள் பிணைத்துக் கட்டினார்கள்.