பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

257



ஒரு நாள், பெருமானார் அவர்கள் குளித்து விட்டு, தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்குப் புறப்படும் போது, அவர்களுக்கு மயக்கம் உண்டாயிற்று. சிறிது நேரத்தில் மயக்கம் நீங்கியதும், தங்களுக்குப் பதிலாக அபூபக்கர் அவர்கள் பள்ளிவாசலில் தொழுகையை நடத்த வேண்டும் என்று பெருமானார் அவர்கள், ஆயிஷா நாயகியார் அவர்களிடம் சொன்னார்கள்.

அதைக் கேட்டதும், “யாரஸூலுல்லாஹ்! அபூபக்கர் இளகிய உள்ளமும், மெல்லிய குரலும் உடையவர்கள். தங்களுடைய இடத்தில் அவர்கள் நிற்க இயலாது. குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் கண் கலங்கி, உள்ளம் நெகிழுமே” என்று சொன்னார்கள்.

பெருமானார் அவர்கள், “அபூபக்கரே தொழுகையை நடத்த வேண்டும்” என்று மறுமுறையும் சொன்னார்கள்.

அது முதல் சில நாட்கள் வரை அபூபக்கர் அவர்களே, தொழுகையில் தலைமையாயிருந்து நடத்தி வந்தார்கள்.


199. இறுதிச் சொற்பொழிவு

பெருமானார் அவர்களுக்கு ஒரு நாள் உடல் நலமாக இருந்தது. குளித்து விட்டு, அலீ, அப்பாஸ் (ரலி) ஆகியோரின் துணையோடு பள்ளிவாசலுக்குச் சென்றார்கள்.

அப்பொழுது, பள்ளிவாசலில் ஆபூபக்கர் அவர்களே, தொழுகையை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

பெருமானார் அவர்கள் அங்கே வருவதை அறிந்து, அபூபக்கர் அவர்கள் தங்கள் இடத்திலிருந்து விலகினார்கள் அங்கேயே நிற்கும்படி சமிக்ஞை செய்து விட்டு, அவர்களின் பக்கமாயிருந்து பெருமானார் அவர்கள் தொழுகையை நடத்தினார்கள்.

தொழுகை முடிந்ததும் பெருமானார் அவர்கள் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

அதுவே பெருமானார் அவர்களின் கடைசிச் சொற்பொழிவாகும்.