பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26



“எவ்வளவு நேரமாக இவ்விடத்திலேயே இருக்கிறேன். எனக்குக் கஷ்டத்தைக் கொடுத்து விட்டீரே” என்று மட்டும் கூறினார்கள் பெருமானார் அவர்கள்.


13. சச்சரவைத் தீர்த்து வைத்தார்கள்

ஒரு சமயம், மக்காவில் நிகழக் கூடியதாயிருந்த ஒரு பெரிய சண்டை பெருமானார் அவர்களின் தீர்க்கமான அறிவுக் கூர்மையாலும், சமாதானத் தூண்டுதலாலும் தவிர்க்கப்பட்டது.

அரேபிய நாடு முழுமைக்கும் புனிதத் தலமாகக் கருதப்படும் கஃபாவின் மதில் பழுதடைந்த நிலையில் இருந்தது: மக்காவாசிகள் அனைவரும் அக்கட்டடத்தைப் புதுப்பிக்கக் கருதி, அதன் ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு குடும்பத்தார் கட்டித் தர முன்வந்தனர்; புனிதத் தலத்தைக் கட்டும் பர்க்கியத்தில் எல்லாக் குடும்பத்தினரும் பங்கு பெற வேண்டும் என்பது அவர்கள் நோக்கம்.

அவ்வாறு பல பிரிவுகளாகக் கட்டட வேலை நிறைவேறியது.

அக்கட்டடத்தின் முக்கிய பகுதியில் ஹஜருல் அஸ்வத் என்னும் கருங்கல்லை நிறுவ வேண்டிய வேலை மட்டும். எஞ்சியிருந்தது. அதை நிறுவும் பாக்கியம் தங்களுக்கே கிடைக்க வேண்டும் என ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆசைப்பட்டார்கள்.

அதன் காரணமாகப் பெரிய கலவரம் நிகழ இருந்தது. அப்பொழுது முதியவர் ஒருவர், அந்தப் பிரச்சனை தீர, ஒரு வழி சொன்னார்.

“நாளைக் காலையில் கஃபாவின் வாசல் வழியாக முதன் முதலில் யார் வருகிறாரோ அவர் செய்யும் முடிவை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்பதே அவ்வழி!

அதை ஒப்புக்கொண்டு அனைவரும் சென்று விட்டனர்.

மறுநாள் காலை, ஆண்டவனுடைய அருளால், கஃபாவின் வாசலில், பெருமானார் அவர்களை, மக்கள் அனைவரும் காண நேர்ந்தது. மக்கள் மகிழ்ச்சியோடு ஆரவாரஞ் செய்தனர்.