பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27



"நம்பிக்கைக்கு உரிய பெருமானார் அவர்கள் செய்யும் முடிவை நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம்" என எல்லோரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

உடனே பெருமானார் அவர்கள், அழுத்தமான, அகலமான ஒரு துணியைக் கொண்டு வரச் சொல்லி, அதன் மத்தியில், தங்கள் திருக்கரங்களால் ஹஜருல் அஸ்வதைத் தூக்கி வைத்தார்கள். பிரச்னை உண்டு பண்ணிக் கொண்டிருந்த ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு தலைவரைத் தேர்ந்து எடுத்து, அவர்கள் அனைவரையும் அந்தத் துணியைச் சுற்றிலும் பிடித்துக் கொண்டு, கருங்கல்லை நிறுவ வேண்டிய இடத்தில் அதைத் தூக்கி வைக்குமாறு கூறினார்கள். அவர்கள் அவ்வாறு செய்ததும், பெருமானார் அவர்கள் தங்கள் திருக்கரங்களால், ஹஜருல் அஸ்வத்தை எடுத்து, அதன் பழைய நிலையில் நிறுவினார்கள்.

இந்த நிகழ்ச்சி, அனைவருக்கும் திருப்தியையும், மகிழ்ச்சியையும் அளித்தது.


14. வியாபாரத்தில் நற்பெயர்

மக்காவாசிகள் அந்தக் காலத்தில், தங்களுடைய மூலதனங்களைத் தொழில் தெரிந்தவர்களிடமும், நம்பிக்கையானவர்களிடமும் கொடுத்து, வேற்று நாட்டுக்குப் போய் வர்த்தகம் செய்யும்படி அனுப்புவார்கள். அதில் கிடைக்கக் கூடிய இலாபத்தை உரியவர்கள் பங்கு பிரித்துக் கொள்வது வழக்கம்.

பெருமானார் அவர்களும் இவ்வாறு பங்கு சேர்ந்து, வியாபாரம் செய்து வந்தார்கள். வியாபாரத்தை அவர்கள் நேர்மையாகவும், சிறப்பாகவும் செய்து வந்தமையால், மக்கா முழுவதும் அவர்களுடைய பெயர் பிரசித்தமாயிற்று.


15. பிராட்டியாரின் பிரதிநிதி

கதீஜா பிராட்டியார் மக்காவின் கண்ணியமான குறைஷி இனத்தில் தோன்றியவர்.

இவர் இரு முறை திருமணம் செய்து கொண்டும் விதவையானார்.