பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40



என்னைப் படைத்து, பாதுகாத்து, நபித்துவம் அருளிய ஆண்டவன் இட்ட கட்டளைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வேன். அவர்கள் வணங்கும் விக்கிரகங்களை நான் ஏற்க மாட்டேன். அவற்றுக்கு எல்வித சக்தியும் இல்லை, என்ற உண்மையை அவர்களுக்கு விளக்கிக் கூறுவேன். அவர்கள் விருப்பம் போல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்.

“பெரிய தந்தையே! என்னுடைய வலது கையில் சூரியனையும், இடது கையில் சந்திரனையும் வைத்து, இந்தப் பணியை விட்டு விடும்படி அவர்கள் கோரிய போதிலும், நான் ஒரு போதும் கை விடுவதாயில்லை ஆண்டவன் தன்னுடைய அற்புத ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். அல்லது நான் இம்முயற்சியில் உயிர் துறக்க வேண்டும். அதுவரை நான், என் கொள்கையை விடுவதாயில்லை. எந்த ஆண்டவனுடைய கட்டளையை, நான் நிறைவேற்றுகிறேனோ, அவன் எனக்கு நிச்சயமாக உதவி புரிவான். அவர்களுடைய தீமைகளிலிருந்து என்னைக் காப்பாற்றுவான் என்ற முழு நம்பிக்கை எனக்கு உண்டு” என்று கூறினார்கள்.

அதைக் கேட்ட அபூதாலிப்;"என் அருமைச் சகோதரர் குமாரரே! நீர் எதற்கும் அஞ்சவேண்டாம். உம்முடைய பணியைத் தொடர்ந்து செய்யும்; எவ்விதத்திலும் உமக்குத் தீங்கு நேரிடுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். நீர் உண்மையே உருவானவர்! ஆண்டவனுடைய முழு நம்பிக்கைக்கு உரித்தானவர்! உம்முடைய கொள்கையானது இதர கொள்கைகளைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறது” என்று கூறினார்.

அதன் பின்னர், நாயகப் பெருந்தகை முன்னிலும் பன்மடங்கு, பகிரங்கமாக மக்களுக்குப் போதனை செய்யலானார்கள்.


28. உங்களை நம்புகிறோம்

தம் நெருங்கிய உறவினர்களுக்கு பகிரங்கமாகப் போதனை செய்யுமாறு ஆண்டவனிடமிருந்து தெய்வீக வெளிப்பாடு வந்தது.

பெருமானார் அவர்கள் குறைஷிகளைத் தங்களுடன் மக்காவுக்கு அருகில் உள்ள குன்றுக்குக் கூட்டிக் கொண்டு போய் அக்குன்றின் மீது நின்று கொண்டு,