பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43



அவர் கூறியவற்றைப் பொறுமையோடு செவிமடுத்த பெருமானார் அவர்கள் “தோழரே! எனக்குச் செல்வத்திலோ, தலைமை வகிக்கவோ, பெண் ஆசையோ கிடையவோ கிடையாது. மேலும் என் உடலில் குண பேதமும் இல்லை. நான் ஆண்டவனுடைய பிரதிநிதி! ஆண்டவனின் சிறப்பு மிக்க கருணை நிறைந்த நற்செய்திகளை எடுத்துக் கூறவும், அவனைப் பற்றி உங்களுடைய உள்ளங்களில் அச்சத்தை ஊட்டவுமே நான் வந்துள்ளேன். நான் சொல்வதை நீங்கள் ஏற்பீர்களானால், இம்மையிலும் மறுமையிலும் சுகம் பெறுவீர்கள். என்னுடைய நற்செய்திகளை அலட்சியம் செய்து, என்னைப் பொய்யன் என்று கருதினால், உங்களுடைய நிந்தனைகளைப் பொறுத்துக்கொண்டு, அது பற்றி ஆண்டவனிடம் முறையிட்டு விடுவேன். உங்களுக்கும் எனக்கும் மத்தியில் அவனே தீர்ப்பு அளிக்கட்டும்.

“உங்களுக்கு எடுத்துரைக்கும் வேதமானது, பரிபூரண கருணையுள்ள ஆண்டவனால் அருளப் பெற்றது. நீங்கள் எல்லோரும் அறிவதற்காக அரபு மொழியில் அது வெளியாகி இருக்கிறது. அதைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு நன்மைகளும், அதைப் புறக்கணிப்பவர்களுக்கு ஆண்டவனுடைய தண்டனைகளும் பற்றி அதில் அடங்கியுள்ளன.

“மேலே கூறியுள்ள கருத்துகளை உண்மையென நம்பி, நற்காரியங்கள் செய்பவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். இதுவரை நான் கூறியதை நீங்கள் கேட்டீர்கள். இனி, உங்கள் விருப்பம் போல் நடந்து கொள்ளலாம்” என்று கூறி முடித்தார்கள்.

தூது வந்த உத்பா திரும்பிப் போய் விட்டார்.


30. உயிர் துறந்த உத்தமர்

தாங்கள் அனுப்பிய தூதர் மூலமாக, பெருமானார் அவர்கள் கூறிய விஷயங்களை குறைஷிகள் அறிந்தார்கள்.

ஆசைகளைக் காட்டி, பெருமானார் அவர்களை வசப்படுத்த இயலாது என்பதை குறைஷிகள் நன்கு தெரிந்து கொண்டார்கள்.