பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46



33. அன்னிய நாட்டில் சூழ்ச்சி

முஸ்லிம்கள் படும் துன்பங்களைக் காணச் சகியாத பெருமானார் அவர்கள், மக்காவை விட்டு அபிசீனியா நாட்டுக்குப் போய் குடியேறுமாறு கட்டளை இட்டார்கள்.

அவ்வாறே அவர்கள் அபிசீனியாவுக்குச் சென்று குடி புகுந்தார்கள்.

அப்பொழுது அந்த நாட்டை நஜ்ஜாஷ் என்ற கிறிஸ்துவ அரசர் ஆட்சி புரிந்து வந்தார்.

முஸ்லிம்கள் மக்காவிலிருந்து வெளியேறி அபிசீனியாவுக்குச் சென்றதை அறிந்த குறைஷிகள் அப்பொழுதும் விட்டுவிடவில்லை.

அபிசீனியா அரசருக்கும், அங்கு செல்வாக்குள்ள சில பாதிரியார்களுக்கும் விலைமதிப்புள்ள பல பரிசுகளை சில தூதர்கள் மூலம் அனுப்பி, அரசரிடம் கோள் மூட்டி, முஸ்லிம்களைத் திரும்ப அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்தார்கள் குறைஷிகள்.

குறைஷிகளின் தூதர்கள் அரசரிடம் பரிசுகளை அளித்து,

“எங்கள் மக்கா நகரத்தில், சிலர் புதிய மதத்தை உண்டாக்க முற்பட்டார்கள். அதனால், நாங்கள் அவர்களைக் கண்டித்தோம். அவர்கள் இப்பொழுது இங்கே வந்திருக்கின்றனர். அவர்களை சபைக்கு வரவழைத்து விசாரித்து எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கோரினார்கள்.

பாதிரிகளிடமும் பரிசுப் பொருள்களைக் கொடுத்துத் தங்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டார்கள்.

மறுநாள் அரசர், குடிபெயர்ந்து வந்துள்ள முஸ்லிம்களை சபைக்கு வரவழைத்து,” நீங்கள் கிறிஸ்துவ மதத்துக்கும், விக்கிரக வழிபாட்டுக்கும் விரோதமாக வேறு எந்த மாதிரியான புதிய மதத்தை உண்டாக்கி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

குடியேறி வந்தவர்களின் சார்பாக, அபூதாலிப் அவர்களின் குமாரரும், அலி அவர்களின் சகோதரருமான ஜஃபர் எழுந்து,