பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49



34. அபிசீனியா அரசரின் ஆதரவு

ஈஸா நபி அவர்கள் இறை தூதர் என்பதே முஸ்லிம்களின் கொள்கை.

ஆனால், கிறிஸ்துவர்களோ, அவர்களைக் கடவுளின் குமாரர் என்பதாகவே கருதியிருக்கின்றனர்.

அரசர் கிறிஸ்துவர் ஆனதால், முஸ்லிம்களின் கொள்கையானது கிறிஸ்துவ மதத்துக்கு மாறுபாடாக இருப்பதை எடுத்துக் காட்டி, முஸ்லிம்களிடம் அவ்வரசருக்குப் பகைமையை உண்டாக்க வேண்டும் என்று குறைஷித் தூதர்கள் கருதினார்கள்.

மறுநாள் தூதர்களின் தலைவர் அரசரிடம் சென்று,"அரசர் அவர்களே! ஈஸா நபி அவர்களைப் பற்றி முஸ்லிம்களின் கொள்கை எத்தகையது என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

அரசரும் அதைத் தெரிந்து கொள்ளக் கருதி, முஸ்லிம்களை சபைக்கு அழைத்து வருமாறு கட்டளை இட்டார்.

முஸ்லிம்களுக்கு இவ்விஷயம் தெரிந்ததும் கவலையடைந்தனர். ஆயினும், நம் பெருமானார் அவர்களின் கட்டளைப்படி உண்மையைக் கூறுவோம்; நடப்பது நடக்கட்டும் என்ற எண்ணத்தோடு அரச சபைக்குச் சென்றனர்.

அவர்களிடம், “மர்யமுடைய குமாரராகிய ஈலா அவர்களைப் பற்றி உங்கள் கொள்கை என்ன?” என்று கேட்டார் அரசர்.

அதற்கு ஜஃபர், “ஈஸா நபி அவர்கள் ஆண்டவனுடைய அடியார் என்றும், அவனுடைய தூதர் என்றும், எங்கள் நபி அவர்கள் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்” என்று சொன்னார்.

அப்பொழுது அரசர், “இறைவன் பேரில் சத்தியமாக ஈஸா நபி அவர்களைப் பற்றி நீங்கள் என்ன சொன்னீர்களோ அதைக் காட்டிலும் எள்ளளவு கூட அதிகமாக எதுவும் சொல்ல முடியாது” என்று சொன்னார்.

5