பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59



நோய் குணமாகியதும், “ஆண்டவன் உம்முடைய பிரார்த்தனையை அங்கீகரிக்கிறான்” என்றார் அபூதாலிப்.

“ஆண்டவனுடைய கட்டளைகளுக்கு நீங்களும் கீழ்ப்படிந்து நடந்து கொள்வீர்களானால், உங்களுடைய பிரார்த்தனைகளையும் அவன் அங்கீகரிப்பான்” என்று கூறினார்கள் பெருமானார் அவர்கள்.

அபூதாலிப் அவர்கள் மரணத் தறுவாயில், தங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் அழைத்து, “நீங்கள் எல்லோரும் முஹம்மது அவர்களுடன் நட்புறவோடு நடந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு இறுதியாகச் சொல்லுகிறேன். ஏனெனில், அவர் குறைஷிகளின் நம்பிக்கையைக் காப்பாற்றுவார். அரபு தேசத்தின் சத்திய சந்தர் அவரே அவர் கொண்டு வந்திருக்கும் மதத்தை என் மனம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் மற்றவர்கள் பழிப்பார்களே என்ற அச்சத்தால், நாவானது அதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றது” என்றார்கள்.

அபூதாலிப் அவர்கள் உயிரோடு இருக்கும் வரையில், பெருமானார் அவர்களிடம் மிகுந்த அன்பு பாராட்டி வந்ததோடு, பெரிய ஆதரவாகவும் இருந்து வந்தார்கள்.

அதனால், குறைஷிகள் துன்புறுத்தல்கள் ஈடேற முடியாமல் போயிற்று.

அபூதாலிப் அவர்கள் மரணம் அடைந்தவுடன், குறைஷிகளுக்கு இருந்த சிறிய அச்சமும் அகன்றுவிட்டது.

பெரிய தந்தையின் மரணமானது, பெருமானார் அவர்களுக்குப் பெரிய இழப்பாயிற்று. முஸ்லிம்களும் மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்தார்கள்.


42. பிராட்டியாரின் பிரிவு

கதீஜா பிராட்டியார் பெருமானார் அவர்களின் கருத்துக்கேற்ப இணைந்து வாழ்ந்தனர். தொல்லையும் துன்பமும் சூழ்ந்த வேளைகளில், பெருமானார் அவர்களுக்குப் பிராட்டியார் ஆறுதல் அளிக்கக் கூடியவர்களாகவும் இருந்தனர்.