பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63



நீயே பாதுகாப்பவன். என்னை யாரிடத்தில் ஒப்புவிப்பாய்? என்னைக் கொடுமைப் படுத்தும் அந்நிய விரோதியிடத்திலா? அல்லது என்னுடைய பணிகளுக்கு ஒத்துழைக்கும் நண்பரிடத்திலா? உன்னுடைய அதிருப்தியானது என் மீது இல்லாமல் இருந்தால், எனக்கு மற்றவற்றைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. உன்னுடைய பாதுகாப்பானது மிகவும் விரிவானது உன்னுடைய கோபம் என்மீது இல்லாமல் இருக்கட்டும்! என்னுடைய இன்னல்களை உன் விருப்பம் போல் தீர்த்து வைப்பாயாக! உன்னையன்றி எனக்கு வேறு சக்தியும் இல்லை. உதவியும் இல்லை!”


46. வரவிடாமல் தடுத்தார்கள்

பெருமானார் அவர்கள், தாயிப் வாசிகளின் துன்புறுத்தலைச் சகித்துக் கொண்டு, அந்த ஊரை விட்டுப் புறப்பட்டு, வழியில் இரண்டு சிற்றுார்களில் சில நாட்கள் தங்கினார்கள்,

தாயிப் வாசிகள் பெருமானார் அவர்களைத் துன்புறுத்தி அனுப்பியதை அறிந்த மக்கா குறைஷிகள் குதூகலித்தனர்.

பெருமானார் அவர்கள் மக்காவுக்குத் திரும்பி வந்தாலும், அவ்வாறே நிர்ப்பந்தித்து அவர்களைத் திருப்பி அனுப்பி விடத் தயாரானார்கள் குறைஷிகள்.

மக்காவுக்கு வருமுன் பெருமானார் அவர்கள், குறைஷிகளின் நோக்கத்தைத் தெரிந்து கொண்டார்கள். ஆகையால், இந்த நிலைமையில் மக்காவுக்குள் போகக் கூடாது எனக் கருதி, ஊருக்கு வெளியே இருந்து கொண்டு மக்கா வாசிகளுக்குத் தூது அனுப்பினார்கள்.

அதாவது: இஸ்லாத்தில் சேருமாறு குறைஷிகளைக் கட்டாயப்படுத்துவது இல்லை என்றும், வேத வாக்கியங்களை மட்டும் மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்கு இடம் தர வேண்டும் என்றும் தூதில் சொல்லி அனுப்பினார்கள்.

ஆனால் குறைஷிகளோ எக்காரணத்தினாலும் ஆதரவு அளிக்க இயலாது என மறுத்து விட்டனர்.