பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65



அன்றிலிருந்து பெருமானார் அவர்கள் இன்னல்களைப் பொருட்படுத்தாமல், இரவும், பகலும் தனியாகவே இஸ்லாத்தைப் பரப்புவதிலே கவனம் செலுத்தலானார்கள்.

அவர்கள் போதனை செய்யும் போது, அந்தச் சொற்கள் மக்களுக்குக் கேட்காதவாறு, குறைஷிகள் சுற்றி நின்று கொண்டு கூச்சல் போடுவார்கள்.

சுற்றுப்புறங்களிலிருந்து புதிதாக யாரேனும் மக்காவுக்கு வந்தால், பெருமானார் அவர்களின் போதனையைக் கேட்க வேண்டாம் என்று குறைஷிகள் முன்னரே சொல்லித் தடுத்து விடுவார்கள்.


47. புத்துணர்ச்சி பெற்றவர்

வழக்கம் போல் குறைஷிகள் பெருமானார் அவர்களின் போதனைகளைத் தடுத்தும் எதிர்த்தும் வந்தார்கள்.

பெருமானார் அவர்களோ இஸ்லாத்தைப் பரப்புவதில் சிறிதும் தளரவில்லை.

இப்படி இருக்கும்போது, மக்காவின் சுற்றுப்புறத்திலுள்ள ஒர் ஊரிலிருந்து துபைலுப்னு அமர் என்னும் பிரபலமான தலைவர் ஏதோ அலுவலாக மக்காவுக்கு வந்தார். மக்காவிலுள்ள குறைஷிப் பிரமுகர்கள் பலரும் சென்று, அவரை மிகுந்த ஆடம்பரத்தோடு வரவேற்று உபசரித்தனர். அதன்பின் அவரோடு பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில், இஸ்லாத்தைப் பற்றியும் அதன் நபிகளைப் பற்றியும் பேச்சு எழுந்தது.

மக்கா பிரமுகர்கள் பெருமானார் அவர்களைப் பற்றி துபைலிடம் நிந்தனைகளைக் கூறினார்கள். மேலும் தொடர்ந்து, “அவர் எங்களுக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுக்கிறார். நம்முடைய மதத்தையும் உலக வாழ்க்கையையும் அவமதிக்கிறார். நம்முடைய கூட்டத்தாரிடையே பிரிவினையை உண்டாக்கி விட்டார். அவருடைய பேச்சை யாராவது ஒருவர் கேட்பாரானால், அவர் உடனே அவருடனேயே சேர்ந்து விடுகிறார். அதன் பின்னர், தம்முடைய தாய், தந்தை, உறவினர் முதலியோரின் சொற்களை மதிப்பதே இல்லை. அப்படி

6