பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70



உடனே அவர், “என்னுடைய மார்பை, அரேபியர்களின் அம்புக்குக் குறியாக்கிக் கொள்ளவும், ஆட்சியை வேறு ஒருவர் வசம் விட்டு விடவும் நான் விரும்பவில்லை” என்று கூறி, புறப்பட்டு விட்டார்.


51. எண்ணத்தில் தூய்மை - சொற்களில் உண்மை

நபிப் பட்டம் வரப் பெற்ற பத்தாவது ஆண்டு நடை பெற்ற ஹஜ்ஜூக்கு அரபு நாட்டின் பல பகுதிகளிலிருந்து திரளான மக்கள், மக்காவுக்கு வருகை புரிந்தார்கள்.

பெருமானார் அவர்கள், ஒவ்வொரு கூட்டத்தாரிடமும் சென்று இஸ்லாத்தைப் பற்றி அறிவுறுத்தினார்கள்.

ஒரு பகுதியில் பன்னிரண்டுபேர்[1] பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் யத்ரிப் (மதீனா) நகரிலுள்ள கஸ்ரஜ் என்ற கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் அறுவர். அவர்களிடம் சென்று இஸ்லாத்தைப் பற்றிப் போதித்தார்கள். அவர்களும் மிகவும் கவனமாகக் கேட்டார்கள். பெருமானார் அவர்களின் பரிசுத்தமான எண்ணமும், சொற்களின் உண்மையும் அவர்கள் உள்ளத்தில் பசுமையாகப் பதிந்து, அவர்களிடையே மனமாறுதலை உண்டாக்கியது. அவர்கள் அறுவரும் அங்கேயே இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

அவர்கள் மக்காவிலிருந்து யத்ரிபுக்குத் திரும்பியதும், “மக்காவில் ஒரு பெரிய நபி தோன்றியுள்ளார். பல நூறு ஆண்டுகளாக நிலவி வந்த பகைமையை, வெகுவிரைவில் அகற்றி விடக் கூடியவர்; அவரிடம் உண்மை ஒளி திகழ்கிறது. அவர் இறைவனுடைய மார்க்கத்தை உலகில் பரப்புவார்” என்பதாகப் பிரபலப்படுத்தினார்கள்.


  1. இப்னு ஹிஷாம் என்பவர் இப்பன்னிரண்டு தோழர்களின் பெயர்களையும் விபரமாகக் குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்த ஆண்டுகளில் வந்தவர்கள் பற்றிய விபரங்களையும், அவர் தந்துள்ளார்.