பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


நேர்வழியில் பொருள்தேட உரிமை; செல்வனின் செல்வத்தில் ஏழைக்கும் உரிமை; இதுவல்லவா உரிமைப் பொருளாதாரம்! மற்றதெல்லாம் அடிமைப் பொருளாதாரம்தான். இத்தத்துவத்தை வெறும் தத்துவமாகப் பிரச்சாரம் மட்டுமா செய்து கொண்டிருந்தார்? நடைமுறையில் செயல்படுத்தியுமல்லவா காட்டிவிட்டார்! அதுவும் சர்வாதிகாரத்தாலா?-இல்லை! அன்பர்கள் அவர்களாகவே ஏற்றுக்கொண்ட செய்கையினால் பொருளாதாரத் தன்மை கொளச் செய்த தத்துவமல்லவா அது! இந்த வெற்றிகரமான, நியாயமான, இயற்கையான தத்துவத்தை நத்தாமல் வேறு வேறு தத்துவங்களை அல்லவா நத்திக் கொண்டிருக்கிறோம் என்கிறார், இந்த மாபெரும் பொருளாதாரப் புரட்சியை வன்முறையில் அல்ல அன்பெனும் நன்முறையில் செய்து காட்டினார்; எனவே ‘சாந்தி நபி நாயகமே என்கிறார். அருமையான பாடல்.

பெருமானாரை எதிர்ப்படுகின்ற போதெல்லாம் அக்கம் என்ற அக்கிரமக்காரன் முகத்தை வக்கிரமாக வலித்துக் காட்டியதாகவும் பெருமானார் அவனுக்கு இந்நோய் பெருகும்படிச் சபித்ததாகவும் சீறாப்புராணம் கூறுகிறது. பாவலரே இப்படி வலித்துக் காட்டிக் காட்டி அதுவே அவனுக்கு இயல்பாகிவிட அதைக் கண்டுகூடப் பெருமானார் உட்கசிந்ததாகப் பாடுவார்.xi