பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு நாமே உதவி

41


சைக்கிள் ஒட்டுவதில் தான் இந்த நிலைமை வருமா என்றால் இல்லை. தொழில் செய்யும் பொழுதும் தான். வாழ்க்கையிலுந்தான் இந்த நிலைமை இருக்கிறது.

ஓடாத நீர் குட்டையாகிறது. கடைசியில் சாக்கடையாகிறது. ஓடாத எந்திரம் துருப்பிடிக்கிறது. பிறகு ஓடாமலே ஓட்டையாகிப் பயனற்றுப் போகிறது.

மனித உடலும் அப்படித்தான் என்றால், அவன் செய்யும் தொழிலுக்கும் அதே கதிதான்!

‘தொடர்ந்து தொழிலை செய்து கொண்டே இரு. இல்லாவிடில், உன் தொழிலில் நஷடம் அடைந்து விடுவாய்.’

இதுதான் வியாபாரத்தின் நுணுக்கமாகும்.

எந்தத் தொழிலும் தொடங்கிய உடனேயே பிரபலமாகி விடாது. பெரும் லாபத்தைத் தந்து விடாது.

ஆரம்பத்தில் ஆயிரம் கஷடங்கள். அநேக சிக்கல்கள். அடிமேல் அடிகள். எதிர்பாராத பிரச்சினைகள். நல்லதும் கூட கெட்டதாகத் தெரியும். கெடுபிடிகள், ஏமாற்றங்கள், எதிர் தாக்குதல்கள். தொழிலில் எல்லாமே உண்டு. வருமானம் சும்மா வருமா?

தொழிலைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறவர்களால் மட்டுமே தொழிலில் வெற்றி பெற முடியும்.