பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.முன்னுரை

‘நமக்கு நாமே துணை’

இந்த நினைவுதான் நமது வாழ்க்கைப் பயணத்திற்கு நிம்மதி தரும் பெருந்துணை.

மற்றவர்கள் உதவுவார்கள் என்று நம்பலாம். அந்த நம்பிக்கையுடனேயே நின்று விடுவது தான் பெருங் கொடுமையாகப் போய் விடுகிறது.

நமது உயர்வுக்கு நாம் உழைப்பதன் மூலம்தான் உதவிக் கொள்ள வேண்டும். அதாவது. நம் வயிற்றுப் பசிக்கு நாம் சாப்பிடுவதுபோல.

பிறர் சாப்பிட்டால் நம் பசி தீராது. அதுபோலத்தான், பிறர் உழைப்பும் நமது வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் பயன் கொடுக்காது.

பிறரை நம்பி எந்தக் காரியத்தையும் ஆரம்பிக்கும் சிலர். ஆரம்பத்திலேயே அழிந்துபோன கதை ஆயிரம் உண்டு.

பாதிதூரம் சென்று, பொருளையும் புகழையும் பறி கொடுத்துவிட்டு, பரிதவித்து நின்றவர்கள் அநேகம் பேர்கள்.

முடிவுக்கு வந்து விட்டாலும், முகம் நிமிர்த்திப் பார்க்க முடியாத அளவுக்குக் கடன்களை சுமந்து கொண்டு கலங்கியவர்கள் கணக்கில் அடங்க மாட்டார்கள்.

எனவே, எந்தக்காரியத்தைத் தொடங்குவதற்கு முன்னும் பலமுறை சொந்த சிந்தனைக்கு இடம் கொடுத்து, ஆராய்ந்திட வேண்டும்.

அனுபவப் பட்டவர்களிடம் அறிவுரை கேட்கலாம். அவற்றைப் பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்ற அவசியமில்லை.

‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்’ அப்பொருள் சிறப்பினைத் தெரிந்து கொண்டு, சீர்துக்கிப் பார்த்து செயல்படுபவர் தான் செம்மையானவர்களாகிறார்கள்.