பக்கம்:நம் நேரு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

நம் நேரு


அவர் நண்பர்களும் மிதவாத மாநாடுகள் கூட்டினார்கள். வங்கத்தின் தீவிரவாதிகள் செயலைக் கண்டித்து நடவடிக்கைகள் எடுத்தார்கள. 1907-ம் வருஷம் நடந்த சூரத் காங்கிரசுக்கு மோதிலால் தான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொழுது மாநாடு குழப்பத்தில் முடிந்தது; ஆயினும் காங்கிரஸ் கட்சியே மிதவாத இயக்கமாக மாறிவிட்டது.

மோதிலால் பண்பாட்டினால் ஓர் மிதவாதி அல்லர். வலிய உணர்வுகளும் திடமான நம்பிக்கைகளும் அறிவும் ஆற்றலும் பெற்றிருந்த அவருக்கும் மிதவாதத்துக்கும் எவ்வளவோ தூரம் தான். என்றாலும் 1907 முதல் சில வருஷகாலம் அவர் மிதவாதியாக இருந்தது எதனால்? அவர் எதையும் ஆழ்ந்து சிந்தித்து, நல்ல பலன் விளையும் எனக் கண்டால் தீர்க்கமான வகையில் செயல் புரியும் பண்பினர். ஆடம்பரமான கூச்சல்களும் படாடோப வார்த்தைகளும் அவருக்குப் பிடித்தமானவை அல்ல. பெரும் பேச்சுக்களின் பின்னே திடமான செயல் திட்டங்கள் மறைந்து கிடப்பதில்லை என்பது அவர் கருத்து. சுதேசி, பகிஷ்கார இயக்கங்களினால் உருப்படியான பலன்கள் விளைந்துவிடும் என்று அவர் எண்ணினாரில்லை. இவற்றுக்கு அடிப்படையாக அமைந்திருந்த பகைப் புலன்களும், மதரீதியான தேசியமும் அவருடைய இயல்புக்கே ஏற்காதவை. இந்தியாவின் முன்னேற்றத்துக்குப் புராதனப் பெருமைகளைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பது மாத்திரம் போதாது. பழமைக் கலாசாரம், ஜாதி ஆசாரங்கள், சமூகத்தின் பூர்வீகமான பழக்க வழக்கங்களை எல்லாம் புரிந்து கொள்ளும் ஆர்வமோ கெளரவிக்கும் ஆசையோ மோதிலால் நேருவுக்குக் கிடையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/33&oldid=1363248" இலிருந்து மீள்விக்கப்பட்டது