பக்கம்:நம் நேரு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

53


பதிந்தன. தனது நிலைக்காக வெட்கினார் அவர். அவருக்குத் தன் மீதே பரிதாபம் ஏற்பட்டது. நாட்டிலே ஆயிரமாயிரம் மக்கள் சகிக்கவொண்ணாத நிலையில் அவதியுற்று வாழும்போது, தான் ஆடம்பர வாழ்வு வாழ்ந்து கொண்டு, அரசியல் என்ற பெயரால் மேலோட்டமான காரியங்களைக் கவனிப்பதோடு நின்று விட்டதை நினைத்து அவர் வெட்கமும் துக்கமும் கொண்டார். இந்தியாவின் அரைநிர்வான மக்களும், அரைப்பட்டினி ஜனசமுதாயமும் அவர் கண்முன்னே இதுவரை அவர் காணத்தவறிவிட்ட புதியதோர் சித்திரமாக விஸ்வரூபம் எடுத்து நின்றனர். உடையற்று, உணவற்று உரிமையற்று நசுக்குண்டு அவல வாழ்வு வாழும் இந்தியாவைக் கண்டுபிடித்து விட்டார் நேரு. சும்மா பார்த்துப் போக வந்த அவரிடம் மக்கள் கொண்டு விட்டநம்பிக்கை நேருவின் உள்ளத்திலே புதிய உணர்வைத் தூண்டியது. அதுவே அச்சத்தைக் கொடுத்தது.

பலருடன் பேசி பலரது முறையீடுகளையும் கேட்டு, கிராமவாசிகளின் உண்மை நிலைமையையும், அவர்களைச் சுரண்டிக் கொழுக்கின்ற மனிதக் கழுகுகளின் தன்மைகளையும் இனங்களையும் பற்றி விரிவாக அறிந்து கொண்டார். மூன்று நாட்கள் கிராமங்களில் தங்கிவிட்டு அலகாபாத் திரும்பிய நேரு, மீண்டும் கிராம யாத்திரையைத் தொடர்ந்தார். அவர் மற்றும் சிலருடன் கிராமம் கிராமமாகச் சென்று, மண் குடிசைகளில் தங்கி, குடியானவர்களோடு உண்டு உறங்கி, மணிக் கணக்கிலே பேசி, பெரிதும் சிறிதுமான பொதுக் கூட்டங்களில் சொற்பொழிவாற்றி, மக்களின் நம்பிக்கையை வளர்த்தார்.


4
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/56&oldid=1367260" இலிருந்து மீள்விக்கப்பட்டது