பக்கம்:நம் நேரு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

நம் நேரு


அனுமதி மறுக்கப்பட்டது. பிறகு கிடைத்தது. நேருவையும் மற்றவர்களையும் சிறையில் வந்து பார்த்த மோதிலால் துக்கப்பட முடிந்ததே தவிர வேறு எவ்வித உதவியும் செய்ய இயலாது போயிற்று.

விசாரணை முடிந்து தீர்ப்புக் கூறப்பட்டதும் பின் பிரதிகள் வேண்டுமென்று நேருவும் அவரது சகாக்களும் கோரினர். உரிய முறையில் மனுச்செய்தால் கோரிக்கை கவனிக்கப்படும் என்ற பதில் தான் கிடைத்தது.

அன்று சாயங்காலம் ஜெயில் அதிகாரி அவர்களை அழைத்து, சமஸ்தானத்தை நிர்வகித்து வந்த பிரிட்டிஷ் அதிகாரியின் உத்தரவுகள் இரண்டைக் காட்டினர். தீர்ப்பை அமுல் நடத்தும் செயல் காலவரையறை இன்றி ஒத்தி போடப்பட்டிருக்கிறது என்பது ஒன்று. அவர்கள் நாபா சமஸ்தானத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும். விசேஷ அனுமதி இல்லாமல் மறுபடியும் நாபாவினுள் பிரவேசிக்கக் கூடாது என்பது மற்றொரு உத்திரவு.

இவ் இரண்டு உத்தரவுகளின் பிரதிகள் வேண்டுமென்று நேரு கேட்டார். கொடுக்கமறுத்துவிட்டார்கள். போலீசார் மூவரையும் ரயில்வே ஸ்டேஷனுக்கு இட்டுச் சென்று விடுதலை கொடுத்து விட்டார்கள். நேருவுக்கும் நண்பர்களுக்கும் நாபாவில் யாரையும் தெரியாது. மேலும் இரவு கால பந்தோபஸ்தாக நகரின் வாசல்கள் மூடப்பெற்று விட்டன. ஸ்டேஷனில் காத்திருந்த மூவரும் அம்பாலாவுக்கு ஒரு ரயில் வண்டி சீக்கிரம் கிளம்பும் என அறிந்து மகிழ்ந்தனர். அதில் ஏறி அம்பாலா சேர்ந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/67&oldid=1367381" இலிருந்து மீள்விக்கப்பட்டது