பக்கம்:நம் நேரு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

97


லும் தவறுகள் உண்டு என அங்கீகரிக்கவும் அவர் தயாராக இல்லே. நீண்ட காலத் திட்டங்கள் வகுக்கவோ, காங்கிரஸின் லட்சியங்களுக்கு எல்லைகட்டிக்காட்டவோ காந்திஜீ முன்வரவுமில்லை. இதனால் எல்லாம் நேரு அதிருப்தியுடன் தான் திரும்ப நேருந்தது.

1928-ம் வருஷம் பிற் பகுதியில் நேரு முதன்முதலாக நோய்ப் படுக்கையில் விழுந்தார். நாபா சமஸ்தான சிறை வாசம் அளித்த பரிசு அது. அவருக்கு டைபாய்டு கண்டு விட்டது. நேரு தனது உடலின் வலிவையும். நோய் நொடி இன்றி வாழும் நிலையையும், மழை வெயில் பனி முதலியவைகளைத் தாங்கிக் கொள்ளும் சக்தியையும் எண்ணிப் பெருமை கொண்டிருந்தார். இளம் பிராயம் முதலே தவறாது தேகப் பயிற்சி செய்து வந்தது தான் வியக்கத் தகுந்த இந்த உடல் நிலையின் அஸ்திவாரம் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். ஆகவே, நோயுற்று படுத்தபடுக்கையாகக் கிடந்தது நேருவுக்கு முற்றிலும் புதியதோர் அனுபவமாகவே இருந்தது.

அவருடைய இளமையும் உடலுறுதியும் நோய்க்கு விரைவிலேயே முடிவு கட்டி விட்டன என்றாலும் அசதியைப் போக்கி, ஆரோக்கியம் பெறுவதற்காக அவர் பல வாரங்கள் படுக்கை வாசியாக வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்த நாட்களில் அவர் அரசியல் பரபரப்புகளிலிருந்து ஒதுங்கியிருந்து சகல பிரச்னைகளைப் பற்றியும் தெளிவாகச் சிந்திக்க முடிந்தது. "இந்த அனுபவம் மனோபாவத்தில் குறிப்பிடத் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தின. இன்ன ரகத்தது என விவரிக்கவொண்ணா ஆத்ம அனுபவம் இது" என்று நேரு எழுதியிருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/70&oldid=1367423" இலிருந்து மீள்விக்கப்பட்டது