பக்கம்:நம் நேரு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

நம் நேரு


அரசியல் வானில் நம்பிக்கை ஊட்டும் ஒளிபரவ வில்லை. ஆனால் கவலை தரும் கார்மேகங்கள் கவிந்து வந்தன. மதத்தையும் அரசியலையும் ஒன்று படுத்தி, குட்டை குழப்பிக்கொண்டிருந்தார்கள். ஜாதி வேற்றுமை பல கிளர்ச்சிகளுக்கு வித்து ஆயிற்று. இந்து முஸ்லிம் கலவரங்கள் நடந்து வந்தன. பிரித்து ஆளும் சூழ்ச்சிக் கலையில் கைதேர்ந்த பிரிட்டிஷார் மறைமுகமாக இவற்றை ஆதரித்துத் தூண்டிவிட்டனர்.

ஜவஹர்லால்நேரு சுவாரஸ்யமற்ற முறையில் பணியாற்றிக் காலம் கழித்தார். அலகாபாத் முனிசிபல் சேர்மனாக அவர் மூன்று வருஷம் நிர்வாகம் நடத்த வேண்டியிருந்தது. ஆனால், இரண்டாவது ஆண்டிலேயே பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் ஆசை அவருக்கு எழுந்தது. அதற்காக அவர் கடமையில் குறைகள் புக அனுமதித்தாரில்லை. அவரது தலைமையில் விளங்கிய முனிசிபல் நிர்வாகம் பிரிட்டிஷ் சர்க்காரின் பாராட்டுதலைப் பெற்றது. எனினும் பலனுள்ள ஆக்க வேலை எதிலும் ஈடுபட வழியில்லாமல் காலம் பாழாகிக் கொண்டிருக்கிறதே என்ற ஏக்கமே நிலைத்து நின்றது அவர் உள்ளத்தில்.

தனது ஆற்றலுக்கும் செயல் துடிப்புக்கும் முனிசிபல் நிர்வாகம் மிகவும் குறுகிய எல்லை என்பதை உணர்ந்து. நேரு சேர்மன் பதவியை ராஜிநாமாச் செய்ய முயன்றார், அவரிடம் அதிக அன்புகாட்டிய அங்கத்தினர்கள் அனைவரும் முதல் தடவை நேருவைத் தடுத்துத் தங்களிடையே நிறுத்திக் கொண்டார்கள். எனினும். அவரது பதவிக் காலத்தின் இரண்டாவது ஆண்டு இறுதியில் அவர் ராஜிநாமா செய்தே தீர்த்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/71&oldid=1368223" இலிருந்து மீள்விக்கப்பட்டது