பக்கம்:நலமே நமது பலம்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


என்னுரை

நலமே நமது பலம் என்று இந்த நூலுக்குப் பெயர் சூட்டியிருக்கிறேன்.

வந்தவர்களை எல்லாம் வரவேற்று, வாழச்செய்து, வழிஅனுப்பி வைத்து விட்டு, எப்போதும் நிரந்தரமாக இருக்கும் இயற்கை சூழ்ந்த இந்த உலகத்தில், நாம் எல்லோரும் ஒரு வந்தோடிகள் தாம்.

நிலைத்து நிற்பது நமது பெயர். நீடித்து நிற்பது நமது புகழ். இந்தப் பெயரையும் புகழையும் தான் புண்ணியம் என்கிறார்கள்.

பாவம் என்றும் சொல்வார்களே! அந்தப் பாவம் என்றால் என்ன? நரகம் என்றால் என்ன?

பாவம் என்பது ஒரு ஒழுங்கு மீறிய செயல், ஒழுக்கத்தைக் கடந்த பழக்கம். இந்த உலகில் வாழ உதவுகின்ற, நமது உடலைக்கெடுக்கின்ற காரியம். மனதை மயக்குகிற வீரியம். வாழ்க்கையை சீரழிக்கின்ற சிந்தனைகள்.

இந்தப் பாவம் தருகிற பயன்கள் என்ன? சந்தோஷத்தைக் குலைத்து, உடலை நோய்க் கூடாக மாற்றி, வாழும் காலம் வரை வதைத்துத் தொலைக்கின்ற வக்ரங்கள்தாம் கிடைக்கின்ற பயன்கள்.

இந்தப் பாவம் தருகிற பரிசு, கலக்கமும், குழப்பமும், நோவும், நித்தம் நித்தசம் சாவும், இதுதான் இந்த உலக வாழ்வையே நரகமாக்கி நாசமாக்கி விடுகின்றது.

பாவம் புண்ணியம் என்பது ஏதோ ஒன்று அல்ல. நாம் அன்றாடம் செய்து கொண்டு வாழ்கின்ற வாழ்க்கைக் காரியங்கள்தாம். நடைமுறைகள் தாம்.

அறிவுடையோர் செய்யும் நல்ல காரியம் எல்லாம் புண்ணியம். அறிவற்றோர், ஆசைப்பட்டடோர், அகந்தை வாதிகள், அநியாயவாதிகள் செய்யும் தீய காரியம் எல்லாம் பாவங்கள்.

இந்த உலகில் நமக்கு உள்ள ஒரே ஒரு உறவுநமது உடல்தான். இந்த உலகின் ஒரே ஒரு சொத்து நமது தேகம்தான்.