பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


மறுநாள் மன்னர் ஹம்மாமுக்குச் சென்றார். சாயக்காரன் சொல்லியது போலவே, அபு ஸிர் ஒரு புட்டியில் தான் தயாரித்து வைத்திருந்த தைலத்தை எடுத்துவந்து, அது உரோமங்களை அகற்றக்கூடிய தைலம் என்று கூறினான். அரசர் புட்டியைத் திறந்து முகர்ந்து பார்த்தார். அதில் பாஷாணம் கலந்திருப்பதைக் கண்டு, புட்டியைக் கையில் எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு, கடுங்கோபத்துடன் அவர் அரண்மனைக்குச் சென்றுவிட்டார்.
 திவானில் அமர்ந்துகொண்டு. அரசர் காவலரை ஏவி, அபுஸிர்ரை உடனே பிடித்து வரும்படி உத்தரவு செய்தார். அவர்கள் அவன் கைகளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டு வந்து, அவனை அரசர் முன்பு நிறுத்தினார்கள். அப்பொழுதும் மன்னர் கோபத்தால் கொதிப்படைந்திருந்தார். ஆனால், அவருடைய கோபத்திற்கு என்ன காரணம் என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. அவர் தமது மாலுமிகளின் தலைவரை அழைத்து, அபு ஸிர்ரை அவரிடம் ஒப்படைத்தார். 'இவனை ஓர் ஒடத்திலே எற்றி, ஒரு கோணிக்குள் இவனை வைத்து, மேலே தாளிக்காத சுண்ணாம்புக் கற்களை நிறையப் போட்டு, கோணியின் வாயைக் கட்டி, நமது அரண்மனையின் அருகில், கடலிலே தள்ளிவிட வேண்டும்! என்று கட்டளையிட்டார். கோணியைக் கடலில் தள்ளும்பொழுது தாம் சாளரத்தின் வழியாகப் பார்த்துக்கொண்டிருக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
"உத்தரவுப்படியே!" என்று சொல்லிவிட்டு, மாலுமிகளின் தலைவரான கப்பித்தான் அபு ஸிர்ரை அழைத்துக்கொண்டு சென்றார்.