பக்கம்:நல்ல நண்பர்கள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இதைக் கண்டதும் வீரனுடைய முகம் சிறுத்துவிட்டது. அருகே வந்து சிறிது நேரம் நின்றது. அதை அவர்கள் தொடக்கூட இல்லை வீரனுக்கு இது புதிதாக இருந்தது என்ன காரணம் என்று அதற்குத் தெரியவில்லை. பிறகு, உள்ளே நுழைந்தது. அங்கே கஸ்தூரியையும் காணோம் !

உடனே அது கஸ்தூரியைத் தேட ஆரம்பித்தது. அங்குமிங்கும் ஓடியது. கஸ்தூரி வழக்கமாக இருக்கும் இடம், படுக்கும் இடம், சுற்றும் இடம் எல்லாம் தேடிவிட்டது. காணோம் ஆனாலும், அது விடவில்லை. சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டே இருந்தது.

வீரன் சுற்றுவதைப் பார்க்கப் பார்க்க முரளிக்கும், சீதாவுக்கும் அழுகை அழுகையாக வந்தது. அவர்களுடைய பெற்றோர்களின் கண்களும் கலங்கின. ஆனாலும், என்ன செய்வது ? இறந்த வாத்தை எப்படிக் கொண்டுவருவது ? முதலியாருக்கும், அவர் மனைவிக்கும் ஒன்றுமே தோன்றவில்லை.

மணி எட்டு ஆகிவிட்டது.

சாப்பாட்டு நேரம். அம்மா தட்டுக்களை எடுத்து வைத்துவிட்டு, முரளியையும், சீதாவையும் சாப்பிட அழைத்தாள். ஆனால், இருவரும் அழுதுகொண்டே இருந்தார்கள். சாப்பிட மறுத்துவிட்டார்கள்.

அம்மாவுக்குத் தர்மசங்கடமாகிவிட்டது. உடனே அவள் முதலியாரிடம், “நீங்கள் நாளைக் காலையில் கஸ்தூரியைக் கொண்டுவந்துவிட வேண்டும். கொண்டு வருவதாகச் சொன்னால்தான் இவர்கள் இப்போது சாப்பிடுவார்கள். என்ன சரிதானா?” என்று குழந்தைகள் எதிரிலேயே கேட்டாள்.

15