பக்கம்:நல்ல நண்பர்கள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
“சரி, வீரன் சுற்றட்டும். நீங்கள் சாப்பிடுங்கள். நாளைக் காலைவரைதானே அது இப்படிச் சுற்றிக்கொண்டிருக்கும்? அப்புறம்தான் கஸ்தூரி வந்துவிடுமே !” என்று சமாதானம் கூறினார் முதலியார்.

முரளியும், சீதாவும் சாப்பிட்டுக்கொண்டிருக்தார்கள். முதலியார் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு வீரன் எங்கே இருக்கிறது என்று தேடிப் பார்த்தார். வீட்டுக்குள் இல்லை. தோட்டப் பக்கம் சென்று பார்த்தார். அங்கும் வீரன் இருப்பதாகத் தெரியவில்லை.

'தூங்கிவிட்டதோ !” என்று எண்ணினார். விளக்கை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்குள் சென்று பார்த்தார். வீரன் அங்கேதான் படுத்திருந்தது. ஆனால், எந்த இடத்தில் தெரியுமா ? கஸ்தூரியைப் புதைத்து வைத்தார்களே, அந்த இடத்துக்கு நேராகவே படுத்துக்கொண்டிருந்தது! புதைத்த இடத்தின்மேல் அது தலையை வைத்திருந்தது! முதலியாருக்கு இது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. அருகே சென்று பார்த்தார். வீரனின் கண்களிலிருந்து கண்ணிர் பெருகிக்கொண்டிருந்தது. கஸ்தூரியை மூடியிருக்த இடம் முழுவதும் வீரனின் கண்ணீரால் நனைந்து போயிருந்தது. முதலியாரை அது ஏறிட்டும் பார்க்கவில்லை.

“வீரன் எப்படி அந்த இடத்தைக் கண்டுபிடித்தது ?" என்ற சந்தேகம் முதலியாருக்கு ஏற்பட்டது.

முதலியார், முரளியுடனும் சீதாவுடனும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாரல்லவா ? அப்போது, வீரன் தோட்டத்தில் சுற்றிக்கொண்டே இருந்தது. ஏதோ மாமிச வாசனை அடிப்பதை அது மோப்பத்தால் கண்டுபிடித்துவிட்டது. உடனே, வாசனை வந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தது. உள்ளே இருந்தது, அதன் அருமைக் கஸ்தூரி ! கஸ்தூரியைப் பார்த்ததும், வீரனின் தலை சுற்றியது ; நெஞ்சு துடிதுடித்தது.

17