பக்கம்:நல்ல நண்பர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவள் குழந்தைகளைப் பார்த்து, “நீங்கள் இங்கேயே இருங்கள். இதோ வந்துவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு, முதலியாருடன் தோட்டத்துக்குள் சென்றாள்.

முரளிக்கும் சீதாவுக்கும் உடனே ஏதோ சந்தேகம் தோன்றிவிட்டது. அவர்களும் பின்னாலேயே ஓடினார்கள். எல்லோரும் வீரன் படுத்துக்கிடந்த இடத்துக்கு வந்தார்கள். கண்ணீர் விட்டுக் கொண்டு வீரன் அங்குப் படுத்திருப்பதைக் கண்ட முரளிக்கும் சீதாவுக்கும் 'வீரன் எதற்காக அழுகிறது?' என்பது புரியவில்லை.

“வீரா, வீரா”! என்று அழைத்தார்கள். முகத்தைத் தூக்கிப் பார்த்தார்கள். ஆனால், வீரன் அவர்களைப் பார்க்கவே இல்லை. கண்களிலிருந்து மட்டும் நீர் வழிந்துகொண்டிருந்தது.

“அப்பா, வீரன் செத்துவிட்டதோ!” என்று அழுது கொண்டே கேட்டாள் சீதா.

“இல்லை. மூச்சு ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. கஸ்தூரியைக் காணவில்லையல்லவா? அதுதான் வருத்தமாக இருக்கிறது” என்றார் முதலியார். ஆனால், உண்மையை மட்டும் கூறவே இல்லை.

எல்லோரும் சேர்ந்து அழைத்தும் வீரன் வரவில்லை. முதலியார் இழுத்துப் பார்த்தார் ; இழுக்க முடியவில்லை . உடனே அப்படியே இரண்டு கைகளாலும் அதைத் தூக்கிக் கொண்டு மிகுந்த சிரமத்துடன் வந்தார். பின்பக்கமாக இருந்த ஓட்டுக் கொட்டகையில் அதை வைத்தார்.

“அம்மா ! சோறு கொண்டுவா ; வீரனுக்குக் கொடுக்கலாம்” என்று சொன்னான் முரளி.

20