பக்கம்:நல்ல நண்பர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“நான் போய்க் கொண்டு வருகிறேன்” என்று கூறிவிட்டுச் சீதா அடுப்பங்கரைக்கு ஓடினாள். அம்மாவும் கூடச் சென்றாள்.

சோற்றை எடுத்து வந்ததும், வீரனின் முன் வைத்தாள் சீதா. அப்பொழுதும் வீரன் கண்னை விழித்துப் பார்க்கவே இல்லை முரளியும் சீதாவும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார்கள் ; கொஞ்சிப் பார்த்தார்கள். ஒன்றும் பயனில்லை.

நேரமோ அதிகமாகிவிட்டது.

இரவு மணி பதினொன்று இருக்கும்.

"சரி, நேரமாகிவிட்டது. போய்ப் படுத்துக்கொள்ளுங்கள். நாளைக்கு எல்லாம் சரியாய்ப் போய்விடும். காலையில் தான் நான் கஸ்தூரியை வாங்கிவரப் போகிறேனே !” என்று குழந்தைகளிடம் கூறினார் முதலியார்.

ஆனால், அவர்கள் கேட்கவில்லை. வீரனின் அருகிலேயே கவலையோடு உட்கார்ந்திருந்தார்கள். முதலியார் உடனே, "போய்ப் படுக்கிறீர்களா என்ன?” என்று கோபப்படுவது போல் கூறினார்.

வேறு வழியில்லை. இருவரும் மனமில்லாமல் உள்ளே சென்றார்கள்; படுத்துவிட்டார்கள்.

முதலியாருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. “அந்த வாத்துத்தான் இறந்துவிட்டது. இதுவும் இப்படியா இருக்க வேண்டும் விழித்துக்கூடப் பார்க்க மாட்டேன் என்கிறதே! நாளை விடிந்ததும், முரளியும் சீதாவும் 'கஸ்தூரி எங்கே'? என்று கேட்பார்களே! அவர்களுக்கு என்ன பதில் சொல்லுவது?” என்று மூளையைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருந்தார்.

21