பக்கம்:நல்ல நண்பர்கள்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


துணையில்லாததால், கண்களை இறுக மூடிக்கொண்டு படுத்துவிட்டாள். அவளுக்கும் தூக்கம் வந்துவிட்டது.

கொஞ்ச நேரம் ஆனதும் மழை பெய்ய ஆரம்பித்தது. மழை என்றால் சாதாரண மழை அல்ல ; பலத்த மழையாக இருந்தது. மழையுடன், இடியும் மின்னலும் சேர்ந்து கொண்டன. புயல் காற்று வேறு பலமாக அடித்தது.

சுமார் இரண்டு மணி நேரம் சென்றுதான் மழை நின்றது ; காற்றும் ஓய்ந்தது. அன்று இரவு எப்படியோ கழிந்துவிட்டது.

அதிகாலை

"கொக்கரக்கோ ! என்ற சப்தம் கேட்டது. சீதா எழுந்துவிட்டாள். அண்ணா அண்ணா !” என்று கூப்பிட்டாள். முரளியும் எழுந்தான்.

“வா அண்ணா, வீரனைப் போய்ப் பார்க்கலாம். பாவம், இரவு முழுவதும் சாப்பிடவேயில்லை” என்று கூறிக் கொண்டே சீதா பின்புறத்துக்குச் சென்றாள். முரளியும் கூடவே ஓடினான்.

இருவரும் ஆவலாக ஓட்டுக் கொட்டகைக்குச் சென்றார்கள். அங்கு வீரனைக் காணோம் !

"எங்கே அண்ணா வீரன் போயிருக்கும்:” என்று ஆவலாகக் கேட்டாள் சீதா.

“வா, தோட்டத்துப் பக்கம் பார்க்கலாம்” என்றான் முரளி.

இருவரும் தோட்டத்துப் பக்கம் ஓடினர். சுற்றுமுற்றும் பார்த்தனர். அங்கே கண்ட காட்சி அவர்களைத் திடுக்கிடச் செய்தது !

24