பக்கம்:நல்ல மனைவியை அடைவது எப்படி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

மணத்தின் விபரீத விளைவுகள் நிகழ இடம் ஏற்படாது என எதிர்பார்க்கலாம்.

முதலில் சந்திக்கும் நபர்களில் இருவருக்குமோ அல்லது ஒருவருக்கோ நேரடிச் சந்திப்பு திருப்தியளிக்கவில்லை; எதிர் ஸெக்ஸ் நபர் தனக்கு ஏற்ற துணையாகத் தோன்றவில்லை எனும் அபிப்பிராயபேதம் எழுந்தால் வேறு தகுந்தவர்கை சந்திக்கும்படி கழகம் சந்தர்ப்பம் அமைத்துக் கொடுக்கும்.

இவ்வித உயரிய முறையில் நிர்வகிக்கப்படும் கல்யாணக் கழகங்கள் சிறப்பான பணி புரிய முடியும். ஜெர்மணியைச் சேர்ந்த நகரம் ஒன்றில் இத்தகைய உயர்முறைக் கழகம் ஒன்று பல வருஷங்களாகச் சேவை புரிகிறது என்றும், அதன் கண்காணிப்பில் நிகழ்ந்த திருமணங்கள் நல்ல வாழ்க்கை வெற்றிகளாக திகழ்கின்றன என்றும் விரிவாகக் கூறும் கட்டுரை ஒன்றை ஒரு ஆங்கில சஞ்சிகையில் படித்தேன். இது போல் இன்னும் சில இடங்களிலும் கழகங்கள் இருந்தாலும் இருக்கலாம், இது நல்ல ஏற்பாடு.

கல்யாணம் ஆக வேண்டிய ஆண், பெண்களின் வர்ணனைகளை பத்திரிக்கையில் விளம்பரம் செய்து, தேவைப்படும் மணமகள் அல்லது மணமகனின் வயது, படிப்பு, பிற தகுதிகள் இப்படி இப்படி யிருக்க வேண்டும் என்று அறிவிப்பதை விட மேலே கூறியுள்ள முறை நல்லதில்லையா? பத்திரிக்கை விளம்பரத்தினால் நூற்றுக் கணக்கான மனுக்கள் வந்து குவியும்படியும், பலரும் பலவிதமாகப் பேசி நையாண்டி செய்யவும், வீணர்கள் சும்மா 'விளையாட்டுக்காக' எழுதிப் போடவும் தூண்டுகின்றன. இந்த விவாக முறையை விட கௌரவமானது, உயர்ந்தது, சிறந்தது, நேர்மையானது முன் சொன்ன கழக முறை.