பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆறும் நீரும்

ல்ல வெயில் காலம். வழிப்போக்கர் இருவர் சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தார்கள். நடைக் களைப்பும் வெயில் கொதிப்பும் அவர்களுக்குத் தண்ணிர்த் தவிப்பை உண்டுபண்ணின.

சுற்றிலும் ஒரே பொட்டல். அருகில் வீடு வாசல் தோப்புத் துரவு ஒன்றும் கிடையாது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்கள்.

திடீரென்று அவர்களில் ஒருவர் மகிழ்ச்சியோடு பேசினார் "அண்ணா, இப்போதுதான் நினைப்பு வருகிறது. வலதுகைப் புறமாக கூப்பிடு தூரம் சென்றால் அங்கே ஒர் ஆறு இருக்கிறது. அங்கே சென்று தண்ணிர் குடித்துக் களைப்பாறியபின் திரும்பலாம்.”

அவர் கூறிய செய்தி கூடவந்தவருக்கும் இன்பம் தந்தது.

இருவரும் வலது புறமாகத் திரும்பினார்கள். சிறிது தூரம் நடந்தபின், ஆற்று மணல் பரந்து கிடப்பதைக் கண்டார்கள்.

ஆற்றைக் கண்டுவிட்ட குதுாகலத்துடன், கொதிக்கும் மணற்சூட்டையும் பொருட்படுத்தாமல் விரைந்து நடந்தார்கள்.