பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குருவியும் பருந்தும்

காட்டிலே ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் தொடையிலே ஒரு சிட்டுக் குருவி வந்து உட்கார்ந்தது. முனிவர் அதை நோக்கினார். சிட்டுக் குருவியின் சின்னஞ்சிறிய அழகான உருவம் அவர் உள்ளத்திலே அன்பு பெருகச் செய்தது. ஆதரவாக அவர் அதன் முதுகைத் தடவிக் கொடுத்தார். அன்பின் மிகுதியால் அதற்குத் தாம் கற்ற கல்வி முழுவதையும் கற்றுக் கொடுத்தார்.

சிட்டுக் குருவி சிறந்த கல்வியறிவு பெற்றது, அது பறவைகளிடம் திரும்பிச் சென்றபோது, எந்தப் பறவையும் கல்வியில் அதற்கு நிகராக நிற்க முடியவில்லை. எல்லாப் பறவைகளும் அதனிடம் யோசனை கேட்க வந்தன. அதன் புகழ் எங்கும் பரவியது. புகழ் பெருகப் பெருகச் சிட்டுக் குருவிக்குச் செருக்கும் பெருகியது. கல்விக் கடலே தான்தான் என்று நினைத்தது கல்விக்கடல் என்று எல்லாப் பறவைகளும் தன்னை அழைக்க வேண்டும் என்று அது விரும்பியது. விரும்பியதைச் சொல்லியது. கல்விக்கடல் சிட்டுக் குருவியார் அவர்களே வணக்கம் என்று சொல்லித்தான் எந்தப் பறவையும் தன்னை அழைத்துப் பேச வேண்டும் என்று அது கூறியது. அவ்வாறு வணங்கிப் பேசாத பறவைகளுடன் அது பேச மறுத்தது.