பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



52 நல்வழிச் சிறுகதைகள்

கதிரவன் சிந்தனையைக் கண்டு காரணம் கேட்டான். கடலின் போக்கைப்பற்றிக் கதிரவன் கூறினான். அதைக் கேட்டபின் காற்றரசன் சொன்ன செய்தி கதிரவனை மேலும் துன்பப்படச் செய்தது.

"நீ வரும்போதுதான் கடல் தன் அலைகளைச் சுருக்கிக் கொள்கிறது. இரவில் நிலவரசன் வரும் போது எவ்வளவு மகிழ்ச்சி கோள்ளுகிறது தெரியுமா ? பொங்கிப் பொங்கி அலைகளை உயரச் செலுத்தி ஆனந்தம் கொள்ளுகிறது உன்னுடைய நட்பை அது விரும்பவில்லை. நிலவரசனைத்தான் அது விரும்புகிறது” என்று காற்றரசன் கூறினான்.

மறுநாள் நிலவரசன் பகலிலேயே வெளியில் வந்தான். கடல், அலைகளைப் பெரிதாக்கிக் கொண்டது. கதிரவன் நிலாவரசனை நேருக்கு நேரே பார்த்தான். 'நிலாத்தம்பி, இந்தக் கடல் உன்னைக் கண்டு பொங்குவதும் என்னைக் கண்டு. பொங்காததும் ஏன் ?” என்று கதிரவன் கேட்டான்.

"அண்ணா, என் கதிர்கள் குளிர்ச்சியாயிருப்பதால் கடலுக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. அதனால் ஆனந்தமாகப் பொங்குகிறது. உன் கதிர்கள் வெப்பமாக இருப்பதால் சூடு தாங்காமல் சுருங்குகிறது” என்றான் நிலவரசன். காரணமறிந்த கதிரவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

கருத்துரை:- இனிய சொற்களே மகிழ்ச்சியைத் தரும்.கடுஞ் சொற்கள் மகிழ்ச்சியைத் தரா.