பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



54 நல்வழிச் சிறுகதைகள்

காசியில் இருந்த ஒரு வடமொழிப் புலவர் திருக்குறள் படிப்பதற்காகத் தமிழைக் கற்றார். தமிழில் பற்று மிகவே அவர் அதைக் கசடறக் கற்றுப் பெரும் புலவரானார். அவர் மணிவாசகத்தின் புகழைக் கேட்டு, அவனைக் காணப் புறப்பட்டு வந்தார்.

ஊரில் வந்து அவர் மணிவாசகத்தைப் பற்றிக் கேட்டபோது, அவன் இறந்து விட்டதையறிந்து ஏமாற்றமும் துயரமும் அடைந்தார். மணிவாசகத்தின் மகன் அருளரசனையாவது பார்த்துப் போகலாம் என்று அவன் குடிசைக்குச் சென்றார்.

அருளரசன் அவரை அன்போடு வரவேற்றான். வந்த காரணத்தைக் கேட்டு அறிந்தான். தன் பிள்ளையின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி அவர் கையிலே கொடுத்தான். அவர் வாங்க மறுத்தார். அவனோ கட்டாயப்படுத்தி அவரை எடுத்துச் செல்லச் சொன்னான்.

தங்கச் சங்கிலியை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தார் புலவர். குடிசை முகப்பில் ஒரு பெரிய வாழை மரம் காய்ந்து கருகி நின்றது. அதன் அடியிலிருந்து கிளம்பி வளர்ந்து நின்ற சிறிய மரம் பழுத்து நின்றது. தாய்மரம் கனி கொடுத்து மாண்டாலும், கன்று கனி கொடுக்க மறுக்கவில்லை. அது போலத் தான் அருளரசனும் கொடை கொடுக்கப் பின் வாங்கவில்லை” என்று கூறிக்கொண்டே நன்றியுணர்ச்சியுடன் காசிக்குத் திரும்பினார், தமிழன்பராகிய அந்த வடநாட்டுப் புலவர்.

கருத்துரை:- நல்ல குடிப்பிறந்தவர்களின் அருட்குணத்தை எந்தத் துன்பமும் அழித்துவிட முடியாது.