பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தென்றலும் சுழற் காற்றும்

தொலைவிலே நின்ற அந்த மாமரம் சலசல வென்று சிலிர்த்து ஆடிக்கொண்டிருந்தது. அதன் கிளைகளிலே தங்க நிற மாம்பழங்கள் அழகாகத் தொங்கிக் கொண்டிருந்தன. ஓர் அணிற் பிள்ளையும் ஒரு கிளிப்பிள்ளையும் அந்த மாமரத்தை நெருங்கின

"அம்மா, மாமரத் தாயே ! பசித்து வந்திருக்கிறோம்" என்றது கிளிப்பிள்ளை.

"உங்களுக்காகத்தானே பழம் வைத்திருக்கிறேன். நன்றாகச் சாப்பிடுங்கள்" என்று கூறியது மாமரம்.

"மாவம்மா ! இன்று, ஒரே ஆனந்தமாயிருப்பது போல் தெரிகிறதே ! என்ன காரணம்?" என்று விசாரித்தது அணிற்பிள்ளை.

"பிள்ளைகளே! தென்றல் மாமா வந்திருக்கிறார். அவர் வந்திருப்பதே ஓர் இன்பம்தானே!" என்று கூறியது மாமரம்.

அணிற்பிள்ளையும் கிளிப்பிள்ளையும் வயிறு நிறைய பழம் சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிட்டன. தென்றல் மாமாவுடன் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தது மாமரம்.