பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
22 நல்வழிச் சிறுகதைகள்
 

அவர் நமசிவாயத்தின் பண்பு நலன்களைப் பற்றியறிந்து களிப்பு கொண்டார். பின் சில நாட்களில் அவர் நமசிவாயத்தின் நட்புக்குரியவரானார்.

அந்த செல்வந்தர் தன் மகனுக்கு நமசிவாயத்தின் மகளைத் திருமணம் செய்து வைத்தார். நம சிவாயத்தின் மூலம் கண்ணனுடைய நல்ல பண்புகளை அறிந்து அவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தார்.

இதனால் கண்ணனுக்கு நல்ல குடும்பத் தொடர்பு ஏற்பட்டது. அதோடு தந்தையின் நண்பராயிருந்த நமசிவாயம் அவனுக்கு உறவினருமாகி விட்டார்.

பின்னர் நமசிவாயத்தின் தொடர்பில் அவன் அடைந்த நன்மைகள் மிகப் பல. நல்ல பண்புகள் மிக்க தன் மாமனாரின் தொடர்பால் அவன் அடைந்த நன்மைகளும் பலப்பல.

மதுரையில் குறிப்பிடத் தகுந்த வணிகர்களிலே கண்ணனும் ஒருவனாகி விட்டான். நேர்மையோடு அவன் வாணிபம் செய்து வந்ததால், நாளுக்கு நாள் அவன் செல்வம் வளர்ந்தது.

புதிது புதிதாக அவன் வசதிகளையும் இன்பங்களையும் செல்வங்களையும் அடையும் போதெல்லாம் நமசிவாயத்தை நினைத்துக் கொள்ளத் தவறவே மாட்டான்.

கண்ணன் நல்ல பல பிள்ளைகளைப் பெற்று இன்பமாகப் பல காலம் வாழ்ந்து வந்தான்.

கருத்துரை :-நல்லவர்களைக் காண்பதும் நன்று;நல்லவர்கள் சொல் கேட்பதும் நன்று; நல்லவர்கள் குணங்களைப் பேசுவதும் நன்று நல்லவர்களோடு சேர்ந்து இருப்பதும் நன்று.