பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.36 . நல்வழிச் சிறுகதைகள்
 

திண்ணனை எளிதாக வெல்ல அந்த அயலூர்ப் பயில்வான் செய்த சூழ்ச்சி இதுதான். தன் இடைத் துணிக்குப் பின்னால் பல சிறு ஊசிகளைப் பொருத்தியிருந்தான். உடலோடு உடல் சேர்த்து அழுத்தும் போது எதிரியின் உடலில் அவை குத்துமாறு அமைக்கப்பட்டிருந்தன ஊசிகள். இந்தச் சூழ்ச்சியை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

இடையில், சூழ்ச்சிக்கு ஆளான திண்ணனும் அப்போதே சொல்ல முடியவில்லை. அப்போதே சொல்லியிருந்தால், அந்த அயலூர்ப் பயில்வான் திண்ணனிடம் தப்பினாலும் ஊர் மக்களிடம் தப்பிப் போயிருக்க முடியாது.

வெற்றி தோல்வி அறிவிக்கப்பட்ட பின்னர், ஏற்பட்ட ஆரவாரத்தில் திண்ணன் தன் சொல் ஏறாது என்று கண்டு கொண்டான். பேசாமல் வீடு திரும்புவதைத் தவிர, வேறு செய்யத் தக்கது ஒன்றுமில்லை.

வீடு திரும்பும்போது, தன்னுடன் பஞ்சப்பன் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும் என்று திண்ணன் எண்ணினான். இம்மாதிரியான சூழ்ச்சிகளைப் பஞ்சப்பன் எளிதாகக் கண்டுபிடித்து விடும் திறமையுள்ளவன். அவனைக் கோபித்து வீட்டை விட்டுத் துரத்தியது தன் தவறு என்று உணர்ந்தான் திண்ணன். அன்றே அவனைத் தேடத் தொடங்கினான்.

கருத்துரை :- எவ்வளவு வலிமையுள்ளவர்களானாலும்,துணையில்லாமல் ஒரு செயலைச் சிறப்பாகச் செய்ய முடியாது.