பக்கம்:நல்வழி நயஉரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நல்வினை ஆகவேண்டியது - தீவினை போகக் கடவது. போன பிறவியில் செய்த அந்த வினைகள், மண்ணுலகில் வந்து பிறந்தவர்க்கு முதல் பொருள் (மூலதனம்) ஆகும். எண்ணிப் பார்க்கின் எந்த மதத்தார் சொல்வதும் இதைத் தவிர வேறில்லை. ஆதலின் தீவினையை நீக்கி நல்வினையே செய்க. (1)


சொல்லப் போனால், இரண்டு குலங்களைத் தவிர வேறு இல்லை. உலகில் நீதி தவறாத அறநெறி முறைப்படிப் பிறர்க்கு உதவுபவர் உயர் குலத்தார் - உதவாதவர் தாழ் குலத்தார் - இது பட்டறிந்த அனுபவத்தில் அறிந்தபடி யாகும்.(2)


இருக்கும் இந்த உடம்பு துன்பத்தை இட்டு வைக்கும் பை அல்லவா? இவ்வாறு இடும் பொய்யுடலை மெய்யானது என எண்ணாமல், விரைந்து பிறர்க்கு நன்மை செய்க. ஊழின்படி ஏற்பட்ட பெரிய துன்ப நோயிலிருந்து விடுபட்டவரை ஏற்கும் வீடுபேறு (மோட்சம்) அறம் உண்டாயின் கிடைக்கும். (3)


நல்வினைகள் வந்து சேர்ந்தபோ தல்லாமல், யாருக்கும், ஒரு செயலைத் திட்டமிட்டுச் செய்தல் இயலாது. அவர்கட்கே, ஆகும்காலம் வந்துவிடின், கண் இல்லாத குருடன் வீசி அடித்த அளவு கோலுக்குத் தப்பித்தவறி மாங்காய் விழுவதுபோல் எண்ணியது நடைபெறும். (4)


எவ்வளவு முயன்று தேடினும் கிடைப்பதற்கு அரிய நன்மைகள் கிடைக்கமாட்டா. வந்து சேரக் கூடியவற்றை, வேண்டா - போங்கள் என்றாலும் போகமாட்டா. ஆனால், கிடந்து ஏக்கமுற்று மனம் புண்ணாக நெடுநாள் நெடுநேரம் கற்பனையாக எண்ணிக் கிடைக்கப் பெறாமல் அழிந்து போவதே மக்கள் செயலாக உள்ளது. (5)

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்வழி_நயஉரை.pdf/10&oldid=1289754" இலிருந்து மீள்விக்கப்பட்டது