பக்கம்:நல்வழி நயஉரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலகில் அவரவர்க்குக் கொடுத்து வைத்துள்ள இன்பம் தவிர மேற்கொண்டு பெறக் கிடைக்கா. மிக்க நீரை உடைய கடல் கடந்து போய்ச் செயலாற்றி மீண்டுவரினும் மனித உடம்போடு உயிர்கட்கு மேற்கொண்டு பயன் என்ன!. (6)


எந்த வகையில் எண்ணிப் பார்க்கினும், இந்த உடம்பு பொல்லாத புழுக்கள் நிறைந்ததும் நோய்கள் உள்ளதுமான அற்பக் குடிசையாகும். ந ல் ல றி ஞ ர் க ள் இதை அறிந்திருப்பதனால், தண்ணீரில் ஒட்டாமல் தாமரை இலை பிரிந்திருப்பது போல் இவ்வுலகோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பர். பிறரோடு வீண் பேச்சுப் பேசார். (7)


உலகோரே, கேளுங்கள்! பொருள் குவிப்பதற்காக அளவற்ற முயற்சி செய்யினும், ஊழ்வினை கூட்டும் அளவன்றி மேலும் நிரம்பச் சேராவாம். செல்வம் நிலையில்லாதது என்பதைத் தெளிவீராக. எனவே, தேட வேண்டிய செல்வம் நல்லறச் செயல்களே-அறிவீராக. (8)


ஆற்றில் வெள்ள நீர் அற்று மணல் கால் சுடும்படி உள்ள நாளிலும், ஆறு தனது ஊற்றுக் குழியில் பெருகும் நீரால் உலகமாந்தரை உட்கொள்ளச் செய்யும். அது போல நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் ஏழையாய் ஆயிடினும், தம்மிடம் வந்து கேட்பவர்க்கு, மனம் ஒப்பி இல்லை என்னாது ஏதாவது உதவுவார். (9)


உலகோரே! பல்லாண்டு காலமாக அழுது புரளினும் இறந்து போனவர்கள் திரும்ப வருவார்களா? - வரமாட்டார்கள். ஆதலின் அழ வேண்டா. நமக்கும் அதுவே செல்லும் வழியாகும். எனவே, நாம் இறக்கும்வரையும், நமக்கு என்ன கிடக்கிறது என்று எண்ணி, பிறர்க்கு உதவி செய்து உண்டு இருப்பீராக. (10)

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்வழி_நயஉரை.pdf/12&oldid=1289755" இலிருந்து மீள்விக்கப்பட்டது