பக்கம்:நல்வழி நயஉரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் (இலட்சுமி), வஞ்சகம் இல்லாத தூயவர்கட்கு, நீர்வளம், சோலை நிழல் வளம், வயலில் நிறைந்த நெல்போர், நல்லபேர், உயர்ந்த புகழ், நல்ல ஊர் வாழ்வு, வளரும் செல்வம், நிறைந்த வாழ்நாள் ஆகியவற்றை என்றைக்குமே தந்தருளுவாள். (21)


பணத்தை அரும் பாடு பட்டு ஈட்டி யாருக்கும் பயன் படாதபடி மண்ணில் புதைத்து வைத்து நிலை கெட்டுப் போன மாந்தர்களே-கேளுங்கள்! உடலாகிய கூட்டைவிட்டு உயிர் போனபின் அந்தப் பணத்தைக் கண்டுபிடித்து நுகர்பவர் (அனுபவிப்பவர்) யார்? பாவிகளே. சொல்லுங்கள்! (22)


நீதி மன்றத்தில் பொய் பேசி-பொய்ச் சான்று சொன்னவரின் வீட்டில், பேய் குடிபுகும், வெள்ளை எருக்கு பூக்கும், பாதாள மூலிக் கொடி படரும், மூதேவி சென்று தங்கியிருப்பாள், பாம்பும் குடியிருக்கும். (23)


திருநீறு அணியாத நெற்றி அழகிழக்கும். நெய் இல்லாத உணவு சுவையிழக்கும். ஆறு இல்லாத ஊர் வளம் இழக்கும். வேற்றுமை பாராட்டாத உடன்பிறந்தார் இல்லாதவர்க்கு உடம்பு வலு இழக்கும். இளங்கொடி போன்ற பெண் அதாவது மனைவி இல்லாத வீடு எல்லாம் இழக்கும். (24)


ஒருவன் பொருள் மிகுதியாகச் சேர்ந்த தொடக்கத்தில் அளவு மீறிச் செலவு செய்தால், பின்னர் மானம் பறிபோகி, அறிவு அற்று, சென்ற இடங்களில் எல்லார்க்கும் கள்ளன் போல் காணப்பட்டு, வரப்போகும் ஏழு பிறப்புக்கும் தீமை தேடியவனாய், நல்லவர்கட் கெல்லாம் பொல்லாத வனாவான். (25)

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்வழி_நயஉரை.pdf/18&oldid=1289760" இலிருந்து மீள்விக்கப்பட்டது