பக்கம்:நல்வழி நயஉரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மான உணர்வு, உயர்குடும்பப் பெருமை, கல்வி, வள்ளல் பண்பு, சிறந்த அறிவுடைமை, கொடை, நோன்பு, உயர் புகழ், தளராத ஊக்க முள்ள உழைப்பு, தேனின் பிழிவு போல் இனிக்கும் சொல் பேசும் கன்னியர்மேல் காதல் ஆகிய பத்தும், பசிவந்துவிடின் பறந்து போய்விடும். (26)


ஒரு பொருளை அடைய எண்ணினால் அது கிடைக்காமல் வேறொன்று கிடைக்கலாம்; அல்லது அந்தப் பொருளே வந்து கிடைப்பினும் கிடைக்கலாம். இது அல்லாமல், சிறிதும் நினைக்காத பொருள் நம் முன்வந்து சேரினும் சேரலாம். எல்லாமே என்னை ஆளுகின்ற கடவுள் செயலாகும். (27)


உண்பதோ நாழி அரிசி, உடுப்பதோ நான்கு முழத் துணி. நினைத்து எண்ணிக்கையிடும் தேவைகளோ எண்பது கோடிகள். அறிவுக் கண் மறைந்த மாந்தர்களின் குடும்ப வாழ்க்கை, எளிதில் உடையக் கூடிய மண்பாண்டம் போல் இறக்கும்வரையும் கவலை தருவதேயாகும். (28)


மரத்தில் கனிகள் தோன்றிவிடின், உண்பதற்கு வா என வெளவாலைக் கெஞ்சிக் கூவி அழைப்பவர் யாரும் இங்கு இல்லை; அது தானே வரும். கன்று ஈன்ற பசு பாலைச் சுரந்து தருவதுபோல், செல்வர்கள் மறைக்காமல் உதவி செய்யின், உலகத்தார் தாமாக வந்து வேண்டியவர் களாவர். (29)


அரசரே! தாமரைப்பூவில் இருக்கும் நான்முகன் விதித்துள்ள விதிப்படி, தாங்கள்-தாங்கள் முன் செய்த வினைப்பயனைத் தாங்களே அனுபவித்தாக வேண்டும். கொடியவர்களை என்ன செய்வது! ஊரார் எல்லாம் ஒன்று சேர்ந்து வெறுத்து அறிவுரை கூறினும் பழைய விதிப் பயன் போகாது. (30)

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்வழி_நயஉரை.pdf/20&oldid=1289761" இலிருந்து மீள்விக்கப்பட்டது