பக்கம்:நல்வழி நயஉரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நல்ல வளையல் அணிந்த பெண்ணே! நண்டும் முத்துச் சிப்பியும் மூங்கிலும், வாழையும் தாம் அழியப் போகும் காலத்தில் தாம் கொண்ட கருவை வெளிப்படுத்துதல்போல், சிலர் உயர் அறிவும் செல்வமும் கல்வியும் அழியப் போகும் காலத்தில், பிறருடைய பெண்கள் மேல் நாட்டம் கொள்வார்கள் (36)


முன் செய்த வினைப் பயனை வென்று போக்குவதற்கு வேதம் முதலிய எத்தகைய நூலிலும் வழி கூறப்படவில்லை. ஆயினும் நெஞ்சமே கவலைப் படாதே! நிலையான வீடுபேறு (மோட்சம்) அடைய முயல்பவர்க்கு அவர் நினைத்தது கை கூடுமேயல்லாமல், அவரை ஊழ்வினை என்பது தடுக்காது. (37)


நல்லது - கெட்டது என்றும், நான் அவன் என்றும், அல்ல - ஆம் என்றும் வேறுபாடு இல்லாமல் பொது நெறியில் நின்று, தானே கடவுள் - தனக்குள் கடவுள் என்றிருப்பதே உண்மைத் தத்துவமாம். சம்பங் கோரைப் புல்லை அறுத்த பின் கட்டுவதற்கு வேறு கயிறு வேண்டியதில்லை; அந்தப் புல்லாலேயே கட்டலாம். அது போல், கடவுளைத் தானே தன்னுள்ளேயே தேடலாம். (38)


ஒருவன், முப்பது அகவைக்குள் (வயதுக்குள்) காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்றையும் ஒழித்து ஒப்பற்ற பொருளாகிய கடவுளைத் தனக்குள்ளேயே காணானாயின், அவன் கற்ற (சாத்திரக்) கல்வி ஏட்டளவேயாகும். எதுபோல எனில், திருமணம் ஆகாத பெண்கள், முலைகள் இருந்தும் பயனின்றித் தளர்ந்து முதுமை அடைவது போலாம். (39)


திருவள்ளுவரின் திருக்குறளும், சிறந்த நான்கு மறைகளின் முடிவான கருத்துகளும், அப்பர் - சம்பந்தர் - சுந்தரர் ஆகிய மூவரின் தமிழ்த் தேவாரங்களும் முனிவர்கள் மொழிந் தனவும், திருக்கோவையாரும் திருவாசகமும் திருமூலரின் திருமந்திரமும் ஒத்த ஒரு பொருளையே உணர்த்தும் என்று உணர்க. (40)

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்வழி_நயஉரை.pdf/24&oldid=1289766" இலிருந்து மீள்விக்கப்பட்டது