பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 நல்வழிச் செல்வம்

தண்ணீரானது நில நலத்தினாற் சிறப்பை அடையும். தக்க செல்வம் படைத்தவர் ஈகைக் குணத்தினாற் சிறப்பை அடைவர். கண்களைப் பெற்றவர்கள் கருணை காட்டுவதால் சிறப்படைவர். பெண் மக்கள் கற்பழியாத் தன்மையால் பெருஞ் சிறப்பை அடைவர். (46)

சோம்பியிருக்கும் ஒருவன் தனக்குச் செல்வம் வந்து” சேரவில்லை எனத் தெய்வத்தை' நொந்துகொள்வதாற் பயனென்ன. அரிசியிட்ட பானைதான் பொங்கும். வெறும் பானை பொங்குவதில்லை. அதுபோல, நேரான வழியில் சரியாக உழைக்கின்ற இடைவிடா முயற்சியே செல்வம் சேர்ப்பதற்குரிய நல்வழியாகும்.

                         (47)

உற்றாரும், உறவினரும், பெற்றாரும். பிறந்தோரும் காலில் விழுந்து வணங்கி வேண்டினும், கீழ்மக்கள் தம்மிடம் உள்ள செல்வத்துள் சிறிதும் வழங்கமாட்டார். கரும்பானது தன்னைக் கசக்கிப் பிழிகின்ற மக்களுக்கே சாறுவழங்கு வதுபோல, கீழ்மக்களும் தம்மை அடித்துத் துன்புறுத்தும் மக்களுக்கே விரைந்து வழங்குவர். (48)

அடிமைத் தொழில் புரிந்தும், இரந்து பொருள் பெற்றும், கடல் கடந்து சென்றும், கீழ்மக்களை மேன்மக்கள் எனக் கூறியும், பிறரைக் கவிபாடிப் புகழ்ந்தும் வாழ்வது மட்டுமல்ல, பெரும்பதவிகளைப் பெற்றும், பெருஞ் செல்வங்களைப் பெற்றும் வாழ்வதுகூட, எண்ணிப் பார்த்தால், யாவும் பாழுடம்பின் பசியைப் போக்குதற்கென்றே முடியும். (49)

விலைமாதர்களின் துணைகொண்டு நல்வாழ்வு வாழ. விரும்புவது, அம்மிக் கல்லின் துணைகொண்டு ஆற்று வெள்ளத்தைக் கடக்க முயற்சிப்பது போன்றதாகும். அது எப்போதும் நன்மை தராது; இப்போதும் செல்வத்தைத் தொலைத்து வறுமையையும், பிணியையும் கொடுத்துத் துன்புறுத்தும். இல்லாளே என்றென்றும் நல்லாள் என ஆவாள். (50)