பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 நல்வழிச் செல்வம்

நீரும், நிழலும், மனையும், செல்வமும், சீரும், சிறப்பும், பேரும், புகழும் பெற்று வாழ்கின்ற பெருவாழ்வு வேண்டு மானால், அவை மிக எளிதாகப் பெறலாம். அதற்குச் செய்ய வேண்டியதெல்லாம் நல்லதை எண்ணுவதே. வஞ்சமற்ற நெஞ்சமே வாழ வழிவகுக்கும் தன்மையுடையது. (51)

பாடுபட்டுத் தேடிய பணத்தைத் தானும் உண்ணாமல்,பிறருக்கும் வழங்காமல், பூமியில் புதைத்து வைக்கின்ற மக்கள் மிகக் கெட்டவர்கள். அவர் உயிர்நீத்த பிறகு, அச்செல்வத்தை எவர் அனுபவிப்பர்? எனப் பிறரறியாமல் புதைத்து வைக்கும் பாவிகள் எண்ணிப் பார்ப்பதில்லை. (52)


வழக்குத் தீர்க்கும் மன்றத்தி லிருந்துகொண்டு உண்மையை மறைத்துக் கூறுவோர், ஒருதலைச் சார்பாகச் சான்று கூறுவோர், ஒருதலைச் சார்பாக முடிவு கூறுவோர் ஆகிய இவர்களின் இல்லங்கள் குட்டிச் சுவராகி, எருக்கஞ் செடி முளைத்து, பாம்புகளும் வந்தடைந்து. பாழ்பட்டுப் போவதுடன், வாழ்வும் அழித்துவிடும். (53)

ஆறில்லாத ஊரும், நீரில்லாத கிணறும், நெய்யில்லாத உணவும், உடன் பிறப்பில்லாத உடம்பும், மனைவியில்லாத வீடும், அறிவில்லாத செயலும், முறையே அழகின்றி, சிறப் பின்றி, சுவையின்றி,பயனின்றி, ஒளியின்றி, நலமின்றிப் பாழ்பட்டு அழியும். (54)

ஒருவன், தனக்கு வருகின்ற வருவாயைவிட அதிகமாகச் செலவுகளைச் செய்தால், அவன் செல்லுமிடமெல்லாம் பெருமை அழிந்து, அறிவுகெட்டு, நல்லவர்களாலும் பொல் லாதவனாகக் கருதப்பட்டு, பின் திருடனாகவும், தீயவனாகவும் கூடக் காட்சியளிக்க நேரிட்டுவிடும். (55)