பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 நல்வழிச் செல்வம்

மானம், குடிப்பிறப்பு, கல்வி, அறிவு, ஈகைக்குணம், உணர்வு, நெறி, உயர்ச்சி, முயற்சி, இச்சை ஆகிய அனைத்தும் இந்தப் பாழான உடம்பில் பசி வந்தவுடன், சில மக்களிடம் பறந்தோடிப் போய்விடுகிறது. (56)

நாம் ஒன்றை நினைத்துச் செய்தால், அது தவறி வேறொன்றாக முடிகிறது. அன்றி, அதுவே ஒருக்கால் நிறைவேறி விடுகிறது. நாம் நினையாத ஒன்று சில பொழுது நம் முன்னே வந்து நிற்கிறது. எண்ணிப் பார்க்கும் பொழுது இவை யாவும் இறைவனுடைய செயலாகவே தோன்றுகிறது. (57)

உண்பது உழக்கு அரிசியும், உடுப்பது நான்கு முழத் துணியும்தான். ஆனாலும், மனிதன் எண்ணுவதோ எண்பது கோடி நினைவுகள், எவ்வளவுதான் விழிப்பாகப் பாதுகாத்து வந்தாலும், உடைந்துபோகிற மண்கலத்தைப் போன்ற இவ்வுடம்பைப் பெற்று வாழும் வாழ்க்கை சாகும்வரை துன்பம் உடையதாகவே இருக்கும். (58)

மரம் பழுத்துவிட்டால் எவரும் அழைக்காமலேயே வெளவால்கள் மரத்தைச் சூழ்ந்து கொள்ளும், கன்றை சந்த பசுவானது சிறிதும் ஒளிக்காமல் பாலைப் பொழிந்து தருவதுபோல, தம்மிடத்துள்ள பொருளை ஒளிக்காது வழங்கும் வள்ளன்மையுள்ள மக்களை உலகினர் யாவரும் உறவினராகவே கொள்வர். (59)

தினை விதைத்தவன் தினையறுப்பான். வினை விதைத்தவன் வினையறுப்பான். அவனவன் செல்லும் வழியிலும், செய்த செயலிலும் வருகிற பலன்களை அவனவனே அடைந்து தீரவேண்டும். இதற்காகப் பிறர் என்ன செய்ய இயலும்? ஊரே கூடினும் ஒன்றுஞ் செய்ய இயலாது. (60)