பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 நன்னெறி மணி

நற்குணம் படைத்த மக்கள், தம்மைப் புகழாதவர்களுக்கும்கூடத் தம்மாலியன்ற அளவு பொருள்களை வலியச் சென்று கொடுத்து உதவுவார்கள். நாக்குத் தன்னைப் புகழ்ந்து பேசும் என எண்ணியா கையானது இனிய உணவுகளை வாய்க்கு வலியக் கொண்டுபோய்க் கொடுக்கிறது? இல்லை; அதன் இயல்பு அது. (71)

பெரும்பாலான மக்களிடத்தில் ஏதாவது உதவி பெற வேண்டுமானால், அதற்குச் சிலருடைய துணை தேவையாக இருக்கிறது. இது உலக இயல்பு போலும்! பசுவின் பாலைக் கறப்பதற்குக்கூட கன்றின் உதவி தேவைப்படுகிறது அல்லவா? (72)

பிறருக்கு உதவ விரும்பாத மக்களின் செல்வம் அவருக்குப் பின் வேறொருவரால் பிறருக்குப் பயன்படும். அப்போது வழங்குபவருடைய செல்வமாக அது கருதப்படுமே தவிர வைத்துவிட்டுப்போன கஞ்சனுடைய செல்வமாக அது கருதப்படுவதில்லை. மேகங்கள் கடல் நீரைத் தான் கொண்டுவந்து பொழிகின்றன. எனினும் மக்கள் அதை மழைநீர் எனக் கருதுகிறார்களேயன்றிக் கடல் நீர் எனக் கருதுவதில்லை. (78)

நெருங்கிய நண்பர்களாயிருந்த இருவர். பின் மனம் மாறுபட்டு, பிறகு ஒருகாலத்தில் மறுபடியும் கூடினாலும் அவர்களின் நட்பு முன்போல வலுப்பெறுவதில்லை. நெல்லிலே உள்ள உமி சிறிது நேரம் விலகியிருந்து மீண்டும் நெல்லோடு போய்ச் சேர்ந்தாலும், அதனிடத்தில் முன்பு இருந்த உறுதிப்பாட்டைக் காண முடிவதில்லை. (74)

கணவனும், மனைவியும் ஒத்த கருத்துடன் ஒரு செய்கையை ஒரே நோக்குடன் செய்தாக வேண்டும். கண்கள் தனித்தனியே இரண்டாக இருந்தாலும், அவை ஒரு பொருளை ஒரே நோக்குடன் பார்ப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மாறுபட்ட கண்களுக்கு மாறுபட்டுத் தோன்றுவதுபோல மாறுபட்ட மனை வாழ்வும் வேறுபட்டுப் போய் விடும். (75)