பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 முன்னுரை

 ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒளவைப் பெருமாட்டி அருளிய மூதுரை 30-ம், நல்வழி 40-ம், 250 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நன்னெறியில் 30-ம் ஆக 100 வெண்பாக்களைப் பொறுக்கி எடுத்து,அதற்கு எளியநடையில் கருத்துரையும் எழுதி, நல்வாழ்வுக்கு வழி'என்ற பெயரில் இந் நூலைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்குகிறேன்.
 நல்வழி, நன்னெறி, மூதுரை ஆகிய இம் மூன்று இலக்கி யங்களும் மிகச் சிறந்தவை. அரிய கருத்துக்களை, எளிய நடையில், தெளிய உரைப்பவை: மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டுபவை. நல்வழியில் நடந்து, நன்னெறியில் நின்று, மூதுரை கூறிய இம் மூதறிஞர்களைத் தமிழகம் ஒருபோதும் மறக்காது.
 என் தந்தையார் என் ஏழாவது வயதில் எனக்கு அளித்த செல்வங்கள் இவை. நாள்தோறும் ஒவ்வொரு வெண்பாவாக மனப்பாட்ம் பண்ணியவை.இதிலுள்ள அரிய கருத்துக்கள் நாளடைவில் என் உள்ளத்தைக் கவர்ந்தன; நன்கு பயன்பட்டன. சுருக்கமாகக் கூறவேண்டுமானால்,"இவை என் வாழ்வுக்கு வழிகாட்டின' என்றே கூறி விடலாம்.
எனக்கு வழிகாட்டிய இவை இன்றுள்ள இளந்

தலைமுறையினர்க்கும் வழிகாட்ட வேண்டும் என்பதே என் விருப்பம். கவிதையைச் சுவைக்க முடியாதவர்களுக்கு அதன் கருத்தையும் எளிய நடையில் எழுதிச் சேர்த்து வழங்குகிறேன்.

வெண்பாவும், உரைநடையும் நேருக்கு நேராக அமைந் திருப்பினும்,அதன் உரைகள் நேருக்குநேராக அமையவில்லை. இக்காலத்திற்கேற்பச் சில விடப்பெற்றும், சில வருவிக்கப் பெற்றுமுள்ளன. இம்மாற்றங்கள் உயர்ந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பெற்றவை. ஆதலின், இதனை மன்னிக்குமாறும் புலவர் பெருமக்களை வேண்டிக் கொள்ளுகிறேன். தமிழக மக்கள் இதனைப் பயன்படுத்திப் பலனடைவது நல்லது.

1-3-1972 } தங்களன்பிற்குரிய, திருச்சிராப்பள்ளி-8 கி.ஆ.பெ.

                  விசுவநாதம்