பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

மூதுரை முத்து

ஒருவனுக்கு நீ உதவி செய்தால், அதை அவன் எப்போது திருப்பிச் செய்வான்? என எண்ணி ஏங்கியிராதே. அவன் மனிதன் ஆதலின் கட்டாயம் செய்து தீருவான். தென்னை மரங்கூட தன் கால்வழியே உண்ட நீரைத் தலை வழியே தந்து உதவி விடுகிறது.

(1)

நல்லவர்களில் ஒருவருக்கு உதவி செய்தாலும், அது கல்லில் எழுதி வைத்த எழுத்துப்போல என்றும் நிலைத்து நிற்கும். அல்லாத, நெஞ்சில் ஈரமற்ற மக்கள் பலருக்கு உதவி செய்தாலும், அது நீரில் எழுதிய எழுத்துப்போல அப்போதே அழிந்து மறைந்துவிடும்.

(2)

வறுமை வந்தபோது இன்பம் துய்த்தற்குரிய இளமை வந்தெய்துமானால், அது கணவன் இல்லாத மங்கைக்கு அழகு வாய்த்ததுபோலத் துன்பத்தையே தரும். முதுமை' வந்துற்றபோது இன்பம் துய்த்தற்குரிய பொருள்கள் வந்தெய்துமானால், அது நாளல்லாத நாளில் பூத்த நன் மலர்களைப்போலப் பயனின்றி அழிந்து போய்விடும்.

(3)

நன்றாகக் காய்ச்சிய பாவில் நீர் வற்றிப்போனாலும் அதன் சுவை குன்றாததுபோல, நன்மக்களிடத்தில் உள்ள செல்வம் வற்றிப்போனாலும், அவர்களின் குணம் குன்றுவது இல்லை. தன்மையறியாத மக்களிடத்து எவ்வளவுதான் நட்புக்காட்டி வேண்டினும், அவர்கள் குணம் மாறி இரக்கம் காட்டுவதில்லை. தீயிட்டுக் கொளுத்தினாலும் கூடச் சங்குகளின் நிறம் மாறுவதில்லையல்லவா?

(4)

உருவத்தால் பருத்து நீண்டு உயர்ந்த மரங்களெல்லாம் பருவகாலம் வந்தாலன்றிப் பழுத்துப் பயன் தருவதில்லை. அதுபோல, ஒருவன் எவ்வளவுதான் அடுத்தடுத்து முயன்றாலும், அவனது பணி முடியுங் காலத்தைத தவிர, மற்றக் காலங்களில் கைகூடுவதில்லை.

(5)