பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9

விளைவுகள் மறைவதற்கு இன்னும் பல காலம் ஆகலாம். ஆனினும் மகாத்மாவின் தியாக வாழ்க்கையின் சிகரம் அதுதான் என்பதில் ஐயமில்லை.

காந்தி மகான் தமது இறுதியான ஆத்ம தியாகத்தினால் இந்திய நாட்டைக் காப்பாற்றினார். இந்தியா அடைந்த புதிய சுதந்திரத்தைக் காப்பாற்றினார். இந்தியாவில் இரத்த வெள்ளம் ஓடி, கோடிக்கணக்கான மக்கள் செத்து, தேசமே ஒரு பெரிய மயானம் ஆகிவிடாமல் காப்பாற்றினார்.

இனி எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள், ஒரு வேளை ஊழுழிக் காலம் வரையில், மகாத்மா இந்தியாவின் குலதெய்வமாகப் போற்றப்படுவார். உலகத்துக்குப் புது வழிகாட்டி, மனித குலம் சர்வ நாசம் அடையாமல் காப்பாற்றிய தீர்க்கதரிசியாக உலக மக்களால் நெடுங்காலம் பாராட்டப்படுவார்.

இதற்கெல்லாம் அங்குரார்ப்பணம் நவகாளியிலே தான் நடந்தது. காந்திஜியின் கால்நடை யாத்திரையின் போது நடந்தது.

அந்த அரும் பெரும் சரித்திர சம்பவத்தை நேரில் பார்க்க 'சாவி'க்குக் கொடுத்து வைத்திருந்தது.

தாம் அநுபவித்ததைத் தமிழர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று இக் கட்டுரைகளை அவர் எழுதினார். 'சாவி'க்கே உரிய இலேசான நகைச்சுவையுடன் கூடிய எளிய நடையில் எழுதினார்.

வீட்டுக்குள்ளேயிருந்து ஒரு பலகணி வழியாகப் பார்த்தால், அந்தப் பலகணியின் அளவுதான் வெளியே தெரியும் என்பது கிடையாது; சின்னப் பலகணியின் வழியே வெகுதூரம் பார்க்கலாம்.