பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

நவகாளி யாத்திரை


தோன்றிய பலவித பாவங்களை அவர் கவனித்திருக்க வேண்டும். சிறிது நேரத்துக்கெல்லாம் என் நிலைமையைக் கண்டு இரக்கப்பட்டவராய், "கவலைப்படாதீர்; பக்கத்து வீட்டில் ஒரு வங்காளி நண்பர் இருக்கிறார். அவருக்குச் சொந்த ஊர் நவகாளி ஜில்லாதான். அவர் அடிக்கடி அங்கே போய் வந்து கொண்டுமிருக்கிறார். அவரை விசாரித்தால் எல்லா விவரங்களும் தெரிந்துவிடும்" என்று தைரியமூட்டி, அந்த வங்காளி நண்பரிடம் என்னை அழைத்துப் போனார்.

எங்களைக் கண்டதும் அந்த வங்காளி நண்பர், 'ஆஷன்-போஷன்' என்று வங்காளியில் பேசினார். 'வாருங்கள்-உட்காருங்கள்' என்பதற்குத்தான் வங்காள மொழியில் ஆஷன்-போஷன் என்று சொல்லுவார்கள் என்று திரு. சாரியார் எனக்கு விளக்கம் கூறினார்.

பிறகு, "இவர் மதராஸி, நவகாளியில் காந்திஜியைப் பார்க்கச் செல்கிறார். இந்தப் பக்கத்துக்குப் புதியவர். தங்களிடம் நவகாளிக்குப் போகும் வழியைக் கேட்டுத் தெரிந்துகொண்டு போக வந்திருக்கிறார்" என்று அந்த வங்காளி நண்பருக்கு திரு. சாரியார் என்னை அறிமுகப்படுத்தினார்.

மகாத்மாஜி பேரைச் சொன்னதும் அந்த வங்காளிக்காரர் என்னைச் சற்று அதிசயத்துடன் பார்த்துவிட்டு வழி சொல்லலானார்.

"கல்கத்தாவிலிருந்து கோலந்தோவுக்கு ரயில் ஏறிப் போகவேண்டும். கோலந்தோவில் தயாராக நிற்கும் நீராவிப் படகில் ஏறி மக்னா, பத்மா என்ற இரு நதிகளையும் கடந்து சாந்த்பூருக்குச் செல்ல வேண்டும்.