பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

15


சாந்த்பூரை அடைந்ததும் சிட்டகாங் எக்ஸ்பிரஸில் ஏறினால் லாக்ஸாம் என்ற ஜங்ஷன் வரும். அங்கிருந்து நவகாளி எக்ஸ்பிரஸ் கிளம்பும்; அதில் ஏறிக்கொண்டு ஸோணாய் முரி ஸ்டேஷனில் போய் இறங்கினீர்களானால் அப்புறம்..."

"அப்புறம் என்ன?... அப்புறமாவது மகாத்மா ஜியைப் பார்த்துவிடலாம் அல்லவா?" என்று குறுக்கிட்டுக் கேட்டேன்.

"அதுதானே இல்லை; ஸோணாய்முரிக்குப் போய் அங்கே யாரையாவது விசாரித்தீர்களானால் மகாத்மாஜி இருக்கும் இடத்துக்கு வழி சொல்லுவார்கள்" என்று கதையை முடித்தார் வங்காளிக்காரர்.

'அட, ஈசுவரா!' என்று பெருமூச்சு விட்டேன் நான்.

கல்கத்தாவிலிருந்து நான் மகாத்மா இருக்குமிடத்தை அடைவதற்குள் ஒருவேளை அவருடைய இரண்டாவது பிரயாணத் திட்டமும் முடிந்துவிடுமோ என்று சந்தேகம் வந்துவிட்டது.

திரு. சாரியார் என்னை, "என்ன? கிளம்புவதற்குத் தயாரா?" என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

"ஓ, தயார் மெட்ராஸ் எக்ஸ்பிரஸ் எப்போது புறப்படுகிறது?" என்று கேட்டேன்.

ஆமாம்; வங்காளி நண்பர் வழி சொன்ன பிறகு என்னுடைய மனோநிலை ஊருக்குத் திரும்பிவிடும் நோக்கத்தில்தான் இருந்தது. ஆனாலும், முன்வைத்த காலைப் பின்வைப்பது அழகல்ல என்ற திட சங்கல்பத்துடன் நவகாளியை அடைந்தே தீருவது என்று தீர்மானம் செய்துகொண்டேன்.